474
காவல்துறை பற்றி
டாக்டர் அ. செல்லக்குமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றைய தினம் நான் பேசுகிறபோது சொன்ன கருத்து, திருவான்மியூரிலே 90 நாட்களாக illegal custody-ல் வைத்திருக்கிறார்கள் என்பதுதான். அதைச் சொல்லும்போது மேலும் சொல்லியிருக்கிறேன். என்ன காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிற ஆதாரம் என்னிடம் கிடையாது: அதற்கான தகவல் கிடையாது: ஆனால் illegal custody-ல் 90 நாட்கள் வைத்ததுதான் தவறு என்று சொல்லியிருக்கிறேன். (குறுக்கீடுகள்). என்னுடைய பேச்சு அவைக் குறிப்பிலே இருக்கிறது. (குறுக்கீடுகள்).
மாண்புமிகு பேரவைத் தலைவர் : உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்.
டாக்டர் அ. செல்லக்குமார் : இரண்டாவதாக, தலைமைக் காவலர் சந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்ட ஆண்டு, மாதம்...
மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன். நீங்கள் 22 பேர் பேசியிருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய கருத்திற்கும் மாண்புமிகு முதலமைச்சர் பதில் சொன்னால், உங்கள் ஒவ்வொருவரையும் நான் திருப்பி விளக்கம் கேட்டால், இது என்ன மானியக் கோரிக்கையா அல்லது வேறு விவாதாமா? நீங்கள் குற்றவாளிக்காக வாதாடவில்லை என்று சொல்லிக்கொண்டு நிறுத்துங்கள். (குறுக்கீடு) குற்றவாளிக்காக வாதாடவில்லை என்று சொல்லிக்கொண்டு நிறுத்துங்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : குற்றவாளிக்காக வாதாடினார் என்று நான் எங்கும் பேசவில்லை. திரு. செல்லக்குமார் குற்றவாளிக்காக வாதாடினார் என்ற வார்த்தைகளை நான் எங்கும் சொல்லவில்லை. வாக்குப் பிரயோகமாக என்னுடைய உரையிலே எங்கும் இடம்பெறவில்லை. அவர் குறிப்பிட்ட குணசேகரன் என்பவர் எப்படிப்பட்டவர்; அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்; அவரிடமிருந்து 70,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்ற கருத்தைத்தான் சொன்னேன்.