கலைஞரின் சட்டமன்ற உரைகள்
539
என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதைப்போலத்தான் காவல் துறையிலும்கூட, சில பகுதியினர் தவறாகச் சில செயல்களிலே ஈடுபடுகிறார்கள் என்பதற்காக மொத்தமாகக் காவல் துறையை நாம் புண்படுத்துவது, அதற்கு எதிராகக் கருத்துக்களை எடுத்துக் கூறுவது கூடாது. அவர்களும் ஒருவகையான தொழிலாளிகள்தான். அவர்களும் பாட்டாளிகள்தான். அவர்களும் இந்த அரசிலே மக்களுக்காகத் தங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்காகத் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டவர்கள்தான் என்கின்ற உணர்வோடுதான் இதை அணுகவேண்டியிருக்கிறது. அதனால்தான் அன்றைக்கு நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டப் பேரவையினுடைய தலைவராக இருக்கின்ற திரு. கணேசன் அவர்கள்கூட நான் எழுதிய ஒரு பாடலை, காவல் துறையினர் பற்றி நான் எழுதிய ஒரு பாடலை இங்கே நினைவூட்டினார்.
திரு. பக்தவச்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 'உதயசூரியன்' என்கின்ற நாடகத்தில் ஒரு போலீஸ்காரருடைய சிறுகதை இடம்பெறும். அந்த நாடகத்திலே, ஒரு போலீஸ்காரருடைய மனைவி, அவருடைய குழந்தையைத் தொட்டிலிலே போட்டு, ஆட்டும்போது பாடுகின்ற பாட்டு அது.
-
'போலீஸ் வேலைக்கு போகின்ற ஒங்கப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரனே கண் வளராய் காக்கி உடைபோட்டுக்கிட்டு, சிவப்பு தொப்பி மாட்டிக்கிட்டு (அப்போது சிவப்பு தொப்பி - ) போகின்ற ஒங்கப்பனிடம்
பழம்பாக்கி கேட்டுக்கிட்டு வருகின்ற கடன்காரன் தொல்லை தாங்காமல் காவி உடை வேணுமடா, கமண்டலமும் தேவையடா" என்று பாடுகின்ற தாலாட்டுப் பாட்டு அது. அந்தப் பாட்டு இருந்த காரணத்தினாலேயே அன்றைக்குப் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் உதயசூரியன் நாடகத்தைத் தடை செய்துவிட்டார். இது போலீஸ்காரர்களைத் தூண்டிவிடுகின்ற காட்சி, பாட்டு என்று சொல்லித் தடை விதித்துவிட்டார். ஆனாலும், அந்தப் பாட்டை இந்த அவையிலேயே நான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்து, அவருக்கு முன்பாகவே பாடிக்காட்டி, இப்போது உங்களால் தடை செய்ய முடியாது. இந்தப் பாட்டுத்தான் அந்த நாடகத்திலே இடம்பெற்றது என்று, (மேசையைத் தட்டும் ஒலி)