கலைஞரின் சட்டமன்ற உரைகள்
551
வருவதென்றால் தாமதமாகும். செல்வந்தர்கள் என்றால் பரவாயில்லை; ஏழையெளிய கடைக்காரர்களுக்கெல்லாம் ஏதாவது உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, நீதியரசர் கோகுல கிருஷ்ணன் அவர்கள் ஓர் இடைக்கால அறிக்கையை மீண்டும் தந்திருக்கிறார். அந்த அறிக்கைதான் இன்றைக்கு அவையிலே வைக்கப்பட்டிருக்கிறது. பலபேர் அந்த அறிக்கையைப் படித்ததாகவே தெரியவில்லை. நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். சிலபேர், நான் சொல்லி எடுத்துப் படித்தார்கள். எதிர்க்கட்சித் தலைவரே இப்போதுதான் படிக்கப்போகிறார். (சிரிப்பு) கோவை நகரிலே திரு. சுப்பராயன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் - இந்த ஆக்கிரமிப்புகளில் இருந்த 647 நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 450 பேர்களுக்கு, 4 இடங்களில் மாற்றுக் கடைகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். மீதம் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்க, மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மாநகர மேயர், மாநகரக் காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் என்ற செய்தியையும் நான் திரு. சுப்பராயன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதவிர, அன்றாடம் புதிது புதிதாகத் தள்ளுவண்டிக் கடைகள் முளைத்த வண்ணம் உள்ளன. இக்கடைகளை அப்புறப் படுத்துவதற்குக் காவல் துறை வருவதால், காவலர்கள்மீது எரிச்சல் கொண்டு அந்த வியாபாரிகள், அரசியல்வாதிகளிடம் சென்று புகார் கூறுகிறார்கள். காவல் துறை உறுதியாக நடவடிக்கை எடுக்கா விட்டால், மேலும் ஆக்கிரமிப்புக் கடைகள் பெருகும், மதச் சண்டைகள் உருவாவதற்கு ஏதுவாகும் என்பதையும் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து, அவர்களும் அதற்கு ஒத்துழைத்து, வியாபாரிகளும் மாற்று இடங்களைப் பெற்று நலமாக வாழ வேண்டும், அதேநேரத்தில் நகரின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதிலே கவனம் செலுத்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய குமரி மாவட்டத்தினுடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் திரு. மணி அவர்கள்