பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

557

சந்தானம் போன்றவர்களும் நம்முடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நண்பர்களும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவரும் எடுத்துக் கூறியிருக்கின்றீர்கள். 1994-95ஆம் ஆண்டு தேர்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் 98 பேரைப்பற்றிய பிரச்சினை. அவர்கள், முந்தைய ஆட்சிக் காலத்தில் மருத்துவத் தேர்வுக்கும் அனுப்பப்பட்டுவிட்டார்கள். செலக்ஷனாகி மருத்துவத் தேர்வு அதற்கும் அனுப்பப்பட்டுவிட்டார்கள். அதற்குப் பிறகும், போதிய நியமனங்கள் பூர்த்தியாகிவிட்ட காரணத்தால் அவர்களை எடுப்பதற்கில்லை என்று அவர்களைத் தள்ளி வைத்துவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை இந்த அவையிலே பலமுறை உறுப்பினர்கள் வைத்திருக்கின்றார்கள். ஆனால், அதைப்பற்றி அதிகாரிகளிடத்திலே பேசியபோது, தேர்வுப் பட்டியலிலே உபரியாகச் சேர்க்கப்பட்டவர்களுக்குத் தற்போது பணி வழங்குவதற்கு விதிகளிலே இடமில்லை என்று அதிகாரிகள் சட்டப்படியுள்ள கருத்தை எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் சொன்னேன், அப்படித்தான் முன்னொரு தடவை, முஸ்லீம்களைப் பின்தங்கிய சமுதாயத்திலே சேர்ப்பதற்குச் சட்டத்திலே இடமேயில்லை என்று நண்பர் இராஜாராம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது சொன்னார் அந்தக் கோடியிலேயிருந்து. உடனே, இங்கிருந்த முஸ்லீம் உறுப்பினர்களெல்லாம் சத்தம் போட்டார்கள். ஏன் இடமில்லை, ஏன் இடமில்லை என்று. உடனே நான் சொன்னேன், சட்டத்திலே இடம் இல்லாவிட்டாலும் இந்த இதயத்திலே இடமிருக்கிறது என்று சொல்லி அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலேச் சேர்த்தேன். அதை திரு. லத்தீப் மறந்துவிட்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது, மற்றவர்களுக்கு ஞாபகமிருக்கும் என்று கருதுகின்றேன். விதியில் இடம் இல்லையென்று சொன்னாலும்கூட இப்போது...

திரு. முகம்மது கோதர் மைதீன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வெள்ளிக்கிழமையன்று எங்களுடைய தலைவர் அவர்கள் இதே காவல் துறை மானியத்திலே பேசுகின்றபோது, அதையும் சுட்டிக்காட்டினார்கள். பிற்படுத்தப் பட்டோர் பட்டியலிலே சேர்த்ததற்கு, கலைஞர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.