கலைஞரின் சட்டமன்ற உரைகள்
563
கோவை தொகுதியிலே உக்கடம்; கோவை தொகுதியிலே வெரைட்டி ஹால்; சென்னை மெரினா பீச்; காட்டுமன்னார்கோவில் மருதூர்; திண்டுக்கல் தாடிக்கொம்பு; திருமங்கலம் வில்லூர்; கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை; திருவாரூர் வைப்பூர்; திருச்செந்தூர் குறும்பூர்; திண்டிவனம் பெரியதச்சூர்; சமயநல்லூர் ஆவியூர்; வந்தவாசி தாலுகா காவல் நிலையம்; மற்றும் திருக்குவளை மற்று எட்டுக்குடிக்கு இடையில் ஒரு காவல் நிலையம்; ஏனென்றால் எட்டுக்குடி பெரிய முருகனுடைய ஆலயம், ஆண்டுதோறும் 5000, 6000 காவடி வரும், திரு. பழனிசாமி அவர்களுக்குத் தெரியும். அதனால் திருக்குவளை மற்றும் எட்டுக்குடிக்கு இடையிலே ஒரு காவல் நிலையம். வடபழனி - நம்முடைய செல்லக்குமார் கேட்ட காவல் நிலையம் - தியாகராயநகரில் வடபழனியில் காவல் நிலையம்; மதுரை கூடல் புதூர் காவல் நிலையம்; சிதம்பரம் தொகுதி, சோழத்தலம் காவல் நிலையம்; கோவில்பட்டி தொகுதி - கடைசியாக வந்து கொடுத் தார்கள் - குருவிகுளம் காவல் நிலையம். 1991-இலேயிருந்து 1996 வரையிலும் மொத்தம் 5 ஆண்டுகளிலே, கடந்த ஆட்சியில் 23 காவல் நிலையங்கள்தான் புதிதாக ஆரம்பித்தார்கள். இப்போது 1996 முதல் இன்றுவரையில் 57 காவல் நிலையங்களை நாம் புதிதாகத் தந்திருக்கிறோம் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
திரு. எஸ். திருநாவுக்கரசு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான சேப்பாக்கத்தில் சத்தியவாணிமுத்து நகர் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கே கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிக்கு போலீஸ் ஸ்டேஷனே இல்லை என்று சொல்லி அங்கே ஒரு புறக்காவல் நிலையம் வேண்டுமென்று கேட்கிறார்கள். உங்களுடைய தொகுதி அது. அதையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதைப்பற்றி அந்தத் தொகுதியின் உறுப்பினரே இதுவரையில் கோரிக்கை வைக்கவில்லை. (சிரிப்பு). அவர் கோரிக்கை வைக்காததை எடுத்துக்காட்டியதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.