கலைஞரின் சட்டமன்ற உரைகள்
591
நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சிவகுமார், வாத்தியார் முருகன் என்கிற தியாகராஜன் மற்றும் நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் மூன்று வனப் பாதுகாவலர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மூன்று வனப் பாதுகாவலர் களும் பசவன் என்பவனின் கும்பலினால் கொலை செய்யப்பட்டு, அவர்களது உடல்கள் எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்கள். வழக்கு நடைபெற்று வருகிறது.
மார்த்தாண்டத்தில் ஆசிரமம் நடத்திவந்த ஜான் ஜோசப் என்ற போலிச் சாமியார்மீது கற்பழிப்பு, பயமுறுத்தல், கொலை ஆகிய குற்றச் செயல்கள் புரிந்ததாக புகார்கள் வந்தன. தீவிர புலன் விசாரணைக்குப் பின் போலிச் சாமியாரும் மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
தூத்துக்குடி காயல்பட்டினம் பேட்மா நகரில் மஜீத் என்பவர் நரபலி தரப்பட்ட வழக்கில் இரண்டு எதிரிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Eve-teasing காரணமாக பலத்த காயமடைந்த சரிகா ஷா என்ற கல்லூரி மாணவி இறந்துவிட்டார். இதற்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டார்கள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட R.S.S. அமைப்பாளர் குப்புராம் தாக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளையும் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.