பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




592

காவல்துறை பற்றி

திருச்சியில் லீலாவதி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு காரணமான ஸ்ரீபுத்ரா, தினகரன் ஸ்ரீஜெயந்தி, மாதாஜி, பெரிய சத்தியநாராயணன், சின்ன சத்தியநாராயணன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 7 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

சென்னையில் கிறித்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கச் சென்ற ராஜேஸ்வரி என்ற இளம்பெண் கல்லூரி வளாகத்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். காவல் துறையின் தீவிரமான புலன் விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது போன்ற போலியான ஜாமீன் உத்தரவுகளைத் தயார் செய்து, அவற்றைப் பயன்படுத்தி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 48 கைதிகளை ஜாமீனில் விடுவித்துவிட்டார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த குருமூர்த்தி, உடன்குடியைச் சேர்ந்த பொன் ஆதித்தன், சேரன்மகாதேவியைச் சேர்ந்த பாவநாசம் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த பொன்ராஜ் ஆகியோரை ஆதாரங்களோடு கைது செய்து, போலியான ஜாமீன் உத்தரவுகள் தயார் செய்வது ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1999ஆம் ஆண்டில் 6 மாத காலத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில், ஒதுக்குப்புறமாக இருந்த வீடுகளில் வசித்த 21 பெண்கள் ஒரே முறையில் கொலை செய்யப்பட்டார்கள். போலீசாரின் தீவிரமான புலன் விசாரணைக்குப் பிறகு இக்கொலைகளைச் செய்த மருதமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர்கள் தடுப்புச் சட்டத்திலே சிறையிலே அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி, தெரிசனம்கொப்பு என்ற இடத்தில் ஒரு தனியார் வங்கியின் (GSC) பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு ரூ. 60 இலட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப் பட்டார்கள். கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் திரும்பக் கைப்பற்றப்பட்டன.