பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

625

காவலர்கள் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான், இத்தகைய உன்னதமான நிலையை அடைந்தார்கள் என்று நம்முடைய எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் அவர்களுடைய பேச்சிலே குறுக்கிட வில்லை, குறுக்கிட்டால் அவர் நோகக்கூடும், தம்முடைய பேச்சிலும் குறுக்கிடுகிறாரே என்று. அவர்மீது எனக்குள்ள அன்புக்குக் காரணம், அவருடைய பெயர். பன்னீர்செல்வம் என்ற பெயர், இன்று, நேற்றல்ல என்னுடைய பால பருவத்திலேயே கவர்ந்த பெயர். ஏனென்றால், இதே அவையில் மூதறிஞர் இராஜாஜி அவர்கள், முதலமைச்சராக இருந்த காலத்தில் எல்லாம், Premier-பிரதமர் என்றுதான் பெயர். இந்தி, கட்டாயம் என்பதை இங்கே கொண்டுவந்தபோது, பன்னீர்செல்வம் அவர்கள் அதை எதிர்த்து காரசாரமாகப் பேசிய நேரத்தில், இராஜாஜி அவர்கள் பன்னீர்செல்வத்தைப் பார்த்து, "யார் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்? இரண்டே பேர்தான்; ஒருவர் சோமசுந்தர பாரதியார்; இன்னொருவர் நீங்கள்” என்று சொன்னார்கள். சொன்னவுடனே, பன்னீர்செல்வம் சொன்னார் : “இரண்டு பேர்தான் எதிர்க்கிறோம்; ஆனால், கொண்டு வருவது நீங்கள் ஒருவர்தான். (மேசையைத் தட்டும் ஒலி) majority நாங்கள்தான்” என்று சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, தந்திரமாக, மிகச் சாதுர்யமாக பதிலைத் தந்து, பாராளுமன்றச் சரித்திரத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எழுதிய 'Parliamentarian' என்ற புத்தகத்திலேகூட பன்னீர்செல்வம் இடம் பெற்றிருக்கின்றார். அவ்வளவு சாதுர்யம் நம்முடைய பன்னீர்செல்வம் அவர்களுக்கு இருக்கிறதா என்று நான் சொல்லமாட்டேன். ஏனென்றால், அவர் சாதுர்யங்களுக் கெல்லாம் போகக்கூடியவர் அல்லர்; சாது! (மேசையைத் தட்டும் ஒலி). சில நேரங்களில், "சாது மிரண்டால் காடு கொள்ளாது"; அதுவும் எனக்குத் தெரியும். சூது வாது அறியாத சாது! (பலத்த சிரிப்பு). அதுவும் எனக்குத் தெரியும். அதனால்தான் அவர் இங்கே திரு. வீராசாமி அவர்களும், திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் திரு. சுதர்சனம் அவர்களும் குறுக்கிட்டபோதெல்லாம், அவர்களுடைய பதிலைப் பார்த்தால், அவர் சாதுதான் என்பதை நிரூபிக்கின்ற அளவிற்கு, அவருடைய பதில்கள் எல்லாம் அமைந்தன என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள்.

21 - க.ச.உ. (கா.து)