பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

காவல்துறை பற்றி

இந்த மானியத்தின் மீது எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களை நாம் சட்டமன்ற நடவடிக்கை நிகழ்ச்சிகளிலே இணைக்கிறோம். அது மாத்திரம் அல்ல, போலீஸ் துறையைச் சார்ந்த அதிகாரிகள் அவர்களே அவைகளைக் கவனமாகக் கேட்கின்ற வாய்ப்பும் இந்த மாமன்றத்திலே ஏற்பட்டிருக்கிறது. இங்கு எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளலாமோ ஏற்று, சிற்சில இடங்களில் சிறிய தவறுகள் நடை பெற்றிருந்தாலும் அவைகளைத் திருத்திக்கொள்ளுகின்ற அந்தப் பண்பினை போலீஸ் துறை நிச்சயமாகப் பெறும் என்ற நம்பிக்கையை நான் இங்கே தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

நம்முடைய நண்பர் திரு. டி. மார்டின் அவர்கள் பேசிய பொழுது, இந்த மானியத்தின் ஒதுக்கப்பட்ட சில தொகைகளின் வித்தியாசங்களை எடுத்துச் சொல்லி, அதில் குறைத்துவிட்டார்கள் என்று அறிவித்தார்கள். 1967-68-க்கும், 1969-70-க்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டினார்கள். “ஆர்ம்ஸ் & அம்யூனிஷன்ஸ்" என்ற தலைப்பில் 1967-68-ல் 31/2 லட்சம் ரூபாயும், 1968-69-ல் 14 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1969-70-ல் 14 இலட்சம் ரூபாய் என்று குறைத்திருக்கிறீர்களே, இப்படியிருந்தால் காவல்துறை எப்படி ஒழுங்காகக் கடமையாற்ற முடியும் என்று கேட்டார்கள். 1967-68-ல் அதற்கு முந்திய ஆண்டிலுள்ள பாக்கிகள், அதாவது அரியர்ஸ் 18 இலட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததால் 32 இலட்சம் ரூபாய் என்று கணக்கு இருக்கிறதே தவிர வேறல்ல என்பதையும், அந்த 18 இலட்சம் ரூபாயையும் குறைத்துப் பார்த்தால் நாம் எதையும் அந்த ஆண்டிலிருந்து காவல் துறைக்குக் குறைக்கப்படவில்லை என்பதையும் மாண்புமிகு மார்டின் அவர்கள் உணருவார்கள் என்று கருதுகின்றேன்.

'குவாரண்டைன் ஸ்டாஃப்'க்கு 1967-68-ல் 64,438 ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1968-69-ல் 42,400 ரூபாயும், 1969-70-ல் 42,400 ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1967-68-ல் 'அதர் அலவன்ஸஸ்' என்ற தலைப்பில் 'மிஸ்கிளாஸிபிகேஷன் ஆஃப் அக்கவுண்ட்’ ஏற்பட்டுவிட்டது. இதனால் இந்தத் தலைப்பில் மொத்தம் ரூ. 33,226 கணக்கில் புகுந்து விட்டது. ஆகவே, இதையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்.