பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

633

மாநிலத்திலே இந்த ஆண்டு இதுவரையில், 83 சதவிகிதம் சொத்து வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 72 சதவிகிதச் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மதுவிலக்கு, சொத்து வழக்கு, ரவுடித்தனம் போன்றவற்றில் ஈடுபட்ட 242 நபர்கள், தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருக் கின்றார்கள். மேலும், கொலை, கொள்ளை மற்றும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள், உருண்டை ராஜா என்கிற ராஜன், நாகூர் மீரான், செந்தில்குமார் ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்தபோது, அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளும், சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுகிற வகையிலே நடத்தப்பட்டுள்ளன.

'குளித்தலை மீனாட்சி, குளித்தலை மீனாட்சி' என்ற பெயர் நாள்தோறும் பத்திரிகைகளிலே வந்து கொண்டிருந்தது. பரப்பரப்பாகப் பேசப்பட்ட, குளித்தலை ஆசிரியை மீனாட்சி யினுடைய வழக்கு, 19-10-2004 முதல் கண்டுபிடிக்கவே முடியாமல், மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு, நிலுவையிலே இருந்து வந்தது. தமிழகக் காவல் துறைக்குச் சவாலாக இருந்துவந்த இந்த வழக்கை, இந்த அரசு பதவியேற்றபிறகு, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறையினர்; தீவிரமாகப் புலன் விசாரணை செய்து, துப்புத் துலக்கி, 3-7-2006 அன்று, இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான குமார், சண்முகவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே. (மேசையைத் தட்டும் ஒலி).

கடந்த முன்று மாதங்களில், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள்மீது, 25,266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள்; 'எங்கள் ஆட்சியிலே குறைவாகத்தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; உங்கள் ஆட்சியிலே அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன' என்று. அதற்கு உட்பொருள் என்ன? நீங்கள் அந்த வழக்குகளையெல்லாம் பதிவு செய்யாமலே விட்டுவிட்டீர்கள்; நாங்கள் பதிவு செய்கிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? (மேசையைத் தட்டும் ஒலி). ஆகவே, இந்த ஒப்புநோக்கெல்லாம் தேவையில்லாத ஒப்புநோக்கு என்பதை