கலைஞரின் சட்டமன்ற உரைகள்
663
தவிக்கிறார்களே என்று சொன்னார். அவர்கள் ஏங்கித் தவித்தார்களோ இல்லையோ அவர்களுக்காக ஜி. கே. மணி இங்கே ஏங்கித் தவித்த காட்சியை நான் கண்டேன், எல்லோரும் கண்டார்கள். ஆனால் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 1967க்கு பிறகு தி. மு. கழக ஆட்சி உருவாகி நம்முடைய வாய்ப்புக் குறைவின் காரணமாக பேரறிஞர் அண்ணா அவர்களை நாம் இழந்து அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை நான் ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் காவல்துறையினருடைய கஷ்ட, நஷ்டங்களை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து இந்தியாவிலேயே முதல்முதலாக போலீஸ் கமிஷன் அமைத்த மாநிலம் தி.மு.கழக ஆட்சி நடந்த இந்த மாநிலம்தான் (பலத்த மேசையைத் தட்டும் ஒலி).
ஒரு காரியத்தைச் செய்தவர்கள் மார்தட்டிக் கொள்வதிலே தவறில்லை. அந்த வகையிலேதான் முதன் முதலாக தமிழகத்தில் காவல்துறைக்காக ஒரு கமிஷன் கோபாலசாமி அவர்களுடைய தலைமையில் அவர் ஐ.ஏ.எஸ். அல்ல ஐ.சி.எஸ். அவருடைய தலைமையில் அமைத்து அதனுடைய பரிந்துரைகளை நிறைவேற்றினோம். சரியாக சொல்லவேண்டுமேயானால் அப்பொழுது காவலர்களின் மாத சம்பளம் 65 ரூபாய். அந்த முதல் காவல்துறை கமிஷன் செய்த சிபாரிசின்படி மாத சம்பளம் 200 ரூபாயாக உயர்ந்தது. அதற்குப் பிறகு இன்னொரு போலீஸ் கமிஷன் - போலீஸ் கமிஷன் - நான் போட்டதெல்லாம் போலீஸ் கமிஷன்தான். நான் வேறு கமிஷனை நாடிப் போகவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி). அப்படிப்பட்ட இரண்டாவது கமிஷனில் 200 ரூபாய் என்பது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதற்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஐந்தாவது ஊதிய குழு வாயிலாக ஊதியங்களை உயர்த்தியபோது 65 ரூபாய் மாத சம்பளத்தில் இருந்த காவலர்களுக்கு இன்றைய தினம் மாதம் 6500 ரூபாய் கிடைக்கிறது என்றால், இது தி.மு.கழக ஆட்சியிலே எடுத்த முதல் முயற்சியின் விளைவு என்பதை (மேசையைத் தட்டும் ஒலி) அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் வேண்டுமானால் அரசியலுக்காக ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் மனச்சாட்சி உள்ள காவல்துறை நண்பர்கள் நிச்சயமாக இதை உணருவார்கள். உணர்ந்து நன்றி பாராட்டுவார்கள்.