பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

73

ஒரு வீடு அவர்களால் தரமுடியவில்லை என்பதற்காக காமராஜ் அவர்களின் சிலையை ஆந்திராவில், மைசூரில் செய்து வைத்து "நீங்கள் என்ன செய்தீர்கள், ஆளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்க முடியவில்லையே?” என்று எங்கள் அண்ணாவின் சிலைக்கு நடந்தது போல செய்யலாமா என்றால், எதிர்க்கட்சியினர் அப்படிச் செய்யமாட்டோம். எதிர்க்கட்சியினருக்கு அந்த அளவுக்கு பண்பாடு குறைந்த மனம் கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கடலூரில் நடந்ததற்கு வருத்தம் கூறவில்லை. 'நீங்கள் சொன்னீர்கள், ஆகவே, அப்படிச் செய்தார்கள் என்று கருதுகிறேன்' என்று கூறினால், எங்களுக்கு இருக்கிற சங்கடம், இப்படி நடைபெறுகின்ற காரியங்களையெல்லாம் எங்களிடத்தில் பேசுகின்ற நேரத்தில், அல்லது இந்த மன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் ஏதோ கண்டிப்பதுபோல கண்டித்துவிட்டு, பிறகு அப்படிச் செய்கிறவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கிற நிலையில்தான் இருக்கிறார்கள் என்று நாங்கள் கருத வேண்டியிருக்கிறது.

பத்திரிகைகளின் தரம் பற்றி பேசப்பட்டது. கவர்ச்சிப்படம் போடும் பத்திரிகை என்றெல்லாம் பேசினார்கள். காவல்துறை மானியத்தில் பாதிப்பகுதியை பத்திரிகைத்துறை மானியமாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மாற்றிவிட்டார்கள். நான் சொல்கிறேன், இப்பொழுதுகூட உறுதி அளிக்கிறேன். அவர்கள் பேசிய பேச்சு மூலம், கவர்ச்சிப்படம் போடும் பத்திரிகை என்று அவர்களால் கருதப்படுகிற பத்திரிகைகள்கூட அதைத் திருத்திக் கொள்ளக்கூடும். அப்படிப்பட்ட பத்திரிகை தி.மு.க. பேச்சைக் கேட்கிற பத்திரிகை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொண்டால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். அந்தப் பத்திரிகை நிச்சயம் திருத்திக் கொள்ளக்கூடும். அதற்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் கட்சி ஆதரவிலே உள்ள பத்திரிகையிலிருந்து சில வாசகங்களை இங்கே படித்துக் காட்ட விரும்புகிறேன். அப்படி இனி அந்தப் பத்திரிகையில் வராது என்று கூறி பொறுப்பேற்றுக்கொண்டு, அதைச் செயல்படுத்திக் காட்ட எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தயாராக இருக்கிறார்களா? முடியாது அவரால், அதுதான் அவர் எழவில்லை.