84
-
காவல்துறை பற்றி
இன்று காலையிலிருந்து நடைபெற்ற விவாதத்தில் எல்லா மாண்புமிகு உறுப்பினர்களும் பேசினார்கள். விவாதத்தைத் தொடங்கிவைத்த என் அருமை நண்பர் ராமச்சந்திர துரை அவர்கள்கூட - சாதாரணமான விஷயங்களிலேகூட காரசாரத்தைக் குழைத்துத் தருகின்றவர்கள் அதிகமான காரசாரம் இல்லாமல் பேசினதும், நம்முடைய நண்பர் மார்ட்டின் அவர்கள் பேசுகின்ற நேரத்தில், அவர்கள் தாக்குவதாக எண்ணிக்கொண்டு, போலீஸ்துறைக்குப் பதிலாக என்னுடைய அந்தரங்கச் செயலாளர் அவர்கள்மீது தாக்குதலைப் பயன்படுத்தியதன் மூலம், போலீஸ் துறையின்மேல் தாக்குதலைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு காவல்துறை மிகவும் நேர்மையானதாகவும், சிறந்ததாகவும், தமிழகத்திலே அனைவரும் மெச்சத் தகுந்த அளவிலும் ப ணியாற்றிவருகிறது என்பதை எடுத்துக்காட்டினார்கள், தமிழகத்திலே போலீஸ் துறை அனைவரும் மெச்சக்கூடிய அளவிலே தொண்டாற்றி வருகிறது என்பதற்கு இதைவிட வேறு நல்ல எடுத்துக்காட்டு தேவையில்லையென்று நான் கருதுகிறேன்.
நம்முடைய மாநிலத்தில் காவல் துறையினர் எவ்வளவு சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்றுகிறார்கள் என்பதற்குப் பல்வேறு மாநிலங்களுடைய புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். துப்பறிந்த வழக்குகள் என்ற அளவில் வேறுபல மாநிலங்களின் கணக்குகளையும், நம்முடைய மாநிலத்தின் விகிதாசாரக் கணக்கையும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்தால் நன்கு தெரியவரும். 1963-ம் ஆண்டு துப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில் 20.9 சதவீதம்; அஸ்ஸாம் மாநிலத்தில் 20.5 சதவீதம்; பீகாரில் 9.7 சதவீதம்; மேற்கு வங்காளத்தில் 17.5 சதவீதம்; பம்பாயில் 26.5 சதவீதம்; ஒரிசாவில் 23.4 சதவீதம்; கேரளத்தில் 31.2 சதவீதம்; மைசூரில் 39 சதவீதம்; குஜராத் மாநிலத்தில் 24.2 சதவீதம்; உத்திரப் பிரதேச மாநிலத்தில் 18.7 சதவீதம்; மத்தியப் பிரதேசத்தில் 30.3 சதவீதம்; அரியானாவில் 34.9 சதவீதம்; ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 14.4 சதவீதம்; நாகாலாந்து பிரதேசத்தில் 50.1 சதவீதம்; பஞ்சாப் மாநிலத்தில் 35 சதவீதம்; ஆந்திர மாநிலத்தில் 61.6 சதவீதம்; தமிழகத்தில் 60 சதவீதம் ஆகும். ஆந்திரம், தமிழகம் ஆகிய இந்த இரண்டு மாநிலங்களில்தான் குற்றங்கள் 60 சதவீதத்திற்கும் மேலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.