கலைஞரின் சட்டமன்ற உரைகள்
95
பெரிய பணக்காரர்கள் மாத்திரம் பெர்மிட் வாங்கிக் குடிப்பதற்கு உரிமையிருக்கிறது, ஏழை எளியவர்களாக இருக்கிறவர்கள் குடித்தால் பிடிக்கப்படுகிறார்கள் என்று திரு. சங்கரய்யா அவர்கள் குறிப்பிட்டார்கள். பெர்மிட் வழங்குகின்ற முறையிலே அரசு சில மாறுதல்களைச் செய்யவிருக்கிறது. வருமானத்தின் அடிப்படையிலே டி. எம். ஓ. அளவிலே நற்சாட்சிப் பத்திரம், "இவருக்கு இருதய நோய், மது சாப்பிட்டால்தான் உயிரோடு இருப்பார்" என்று கொடுத்தால் தரப்படுகிறது. இதைச் சாப்பிட்டால்தான் உயிரோடு இருப்பார் என்பதற்கும் வருமானத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. நாலாயிரம், ஐயாயிரம் வருமானமுள்ள பணக்காரர்கள் இரண்டு யூனிட் சாப்பிட்டால்தான் உயிரோடு இருப்பார் என்றால் 200, 300 ரூபாய் வருமானம் உள்ள ஏழை எளியவர்களுக்கு இருதய நோய் வராதா என்ற கேள்வி எங்கள் உள்ளத்தில் உறுத்தியது. பெர்மிட் தரப்படுகின்ற சட்டம் வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு பெர்மிட் வழங்கப்படாமல் அவர்களுடைய நோயை அடிப்படை யாகக் கொண்டு வழங்கவேண்டுமென்ற முறையிலே மாற்றப்பட உத்திரவு போடப்பட இருக்கிறது. இதற்கு முன்பு புதிதாக பெர்மிட் வாங்குவதற்கு 50 ரூபாய் கட்டணமும் பெர்மிட்டை புதுப்பிப்பது என்றால் 75 ரூபாய் கட்டணம் என்றும் இருந்தது. இனிமேல் புதிதாக பெர்மிட் வாங்குவதற்கு 250 ரூபாய் என்றும் புதுப்பிப்பதற்கு 150 ரூபாய் என்றும் ஆக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
—
இது மாத்திரமல்ல, இதற்கு முன்பு மதுவகையறாக்களுக்கு விற்பனை வரியில்லாமல் இருந்தது. இப்பொழுது 121/2 சதவீதம் விற்பனை வரி மது வகையறாக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆக, மதுவை ரத்து செய்து வராத வருமானத்தை இருக்கிற பெர்மிட்டுகளைப் பயன்படுத்திப் பெறலாமா என்ற அற்ப ஆசையிலே இம்மாதிரிச் செய்கிறோம். பெர்மிட் வாங்கிக் குடிக்கிறவர்கள் பெருகுவதை இதன்மூலம் தடுக்கலாமா என்று பார்க்கிறோம். இந்தக் கட்டணத்தையும் செலுத்தி என்னுடைய இருதய நோயைத் தடுக்க போகிறேன் என்று யாராவது வந்தால் அந்த வருமானத்தை இழக்க இந்த அரசு தயாராக இல்லை.