பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

காவிரிப் பிரச்சினை மீது

நடைபெற்றது. இந்தக் கணக்கை எல்லாம் இப்போது திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் நமக்கு எழுதி, அந்தப் பழைய பாக்கி எல்லாம் இருக்கிறது, அதை எல்லாம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதிலே வேடிக்கை என்னவென்றால், இப்படி ஒரு பரிவர்த்தனை இல்லாமலே திரு.பொம்மை அவர்கள் 5டி.எம்.சி. தண்ணீர் கொடுத்தாரே, அதற்கும், அவர்கள் கேட்காத பரிவர்த் தனையை அதிலே நுழைத்து, அதற்கும் நீங்கள் மின்சாரம் தரவேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அந்த நிபந்தனையைப் போட்டு திரு. பொம்மை அவர்கள் தண்ணீர் தரவில்லை. ஆனாலும் இவர்கள் நிபந்தனையை வலுவிலே புகுத்தி, அதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். நாம் கேட்ட தண்ணீரைப்பற்றி எந்தவிதமான பதிலும் கிடையாது. திரு.வீரேந்திர பட்டீலைப் பொறுத்தவரை நானும் அவரை மிக நன்றாக உணர்ந்தவன்; அவருக்கும் என்னை மிக நன்றாகத் தெரியும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் என்ன காரணத்தாலோ, எப்படி தமிழ்நாட்டிற்கு அரிசி வழங்கக்கூடாது என்று மத்திய அரசு அன்றைக்கு முடிவு எடுத்ததோ. அன்றைக்குத் தமிழக மக்களுடைய வயிற்றிலே அடித்ததோ, அதைப்போல தி.மு.க. ஆட்சி இருக்கிற காரணத்தால் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களிலே இருக்கிற விவசாயிகளுடைய வயிற்றிலும் அடிக்கலாம் என்று அவர்களுக்கு யாராவது அரிசி வழங்காதவர்கள் இப்போது இந்த அறிவுரையை வழங்கி இருப்பார்களோ என்று நான் எண்ணிட வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறேன்

ஒரு மனிதாபிமானம் கூட இல்லாமல், மனிதநேய உணர்வு கூட இல்லாமல் தஞ்சையிலே வாடுகின்ற, திருச்சியிலே வாடுகின்ற, தென்னாற்காடு மாவட்டத்திலே வாடுகின்ற விவசாயிகளுக்கு நாம் பலமுறை கேட்டும் கூட-இன்னும் கூடச் சொல்கிறேன். மூன்று நாட்களாக நான் தொலைபேசியிலே அவர்களோடு தொடர்பு கொள்ள முயலுகிறேன். ஆனால் தவிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள், அவர்களால் பேச முடியவில்லை என்றால் எவ்வளவு பெரிய அரசியல் தாக்கம் இதிலே விளையாடுகிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.