பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

காவிரிப் பிரச்சினை மீது

உடனடி தண்ணீர்த் தேவை குறித்து தமிழக அரசும், கர்நாடக அரசம் பேசுவது நல்லது, எனவே பேசுங்கள் என்று உச்சநீதி மன்றம் கூறியது அதற்கேற்பத்தான், கர்நாடக மாநில அரசோடு, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. நான் அன்றைக்கு இந்த அவையிலே குறிப்பிட்டதைப்போல, பேச்சுவார்த்தைக்கு மீண்டும் செல்லலாமா என்று தமிழகத்திலே ஒரு குரல் எழுந்தபோது, நான் அளித்த விளக்கம், 'நடுவர் மன்றத்தினுடைய வரையறைக்கு உட்பட்டுத்தான் பேச்சுவார்த்தை நடைபெறும், அதிலிருந்து இம்மியும் விலகாமல் பேச்சுவார்த்தை நடைபெறும்' என்று நான் சொன்னேன். அந்த வெளிப்படையான அறிவிப்புக்குப் பிறகு தமிழக அரசின் சார்பிலும், கர்நாடக மாநில அரசின் சார்பிலும் ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கர்நாடகத்துக்கு நாங்கள் சென்று அங்கே பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் தமிழகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை எல்லாம் நடைபெற்றது. பிறகு டெல்லி மாநகரத்திலே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்படி ஐந்து முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி காணவில்லை. அதைக் குறிப்பிட்டு இங்கே இந்த அவையிலே நான் நிதி ஒதுக்கீடு சட்டமுன்வடிவை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிற அந்த உரையில் சொன்னேன். இறுதியாக அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற மேகதாது அணைக்கட்டுத் திட்டத்தை வலியுறுத்திய காரணத்தால் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடரமுடியவில்லை. அத்துடன் முறிந்துவிட்டது என்று குறிப்பிட்டேன்.

இங்கே நம்முடைய உறுப்பினர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப்போலவும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எடுத்துக்காட்டியதைப்போலவும், கர்நாடக முதலமைச்சரைப் பற்றி எந்த ஒரு வார்த்தையும் இங்கே சொல்லவில்லை. அவர் இந்த அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்த காவிரிப் பிரச்சினையிலே தன்னுடைய மாநிலத்திற்காக வாதாடுகிறார் என்ற அந்த உணர்வுக்கு அப்பாற்பட்டு - நானும், கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. பட்டேல் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் தான். நண்பர்கள் என்பதற்காக அவரும் விட்டுத்தர தயாராக