பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப் பிரச்சினை மீது

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

உரை : 1

நாள் : 24.08.1968

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, 82-வது விதியின் கீழ் பேரவையின் கவனத்தை ஈர்த்து ஒரு முக்கிய பொருள் பற்றி இந்த அறிக்கையை அவை முன்பு வைக்க விழைகிறேன்.

தமிழகத்தின் தலையாய பாசன ஆதாரம் காவிரி, 1924-ம் ஆண்டு மைசூருக்கும் தமிழ்நாட்டிற்கும் காவிரிப் பாசனம் சம்பந்தமான ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட சில முக்கிய கூறுகள் மேட்டூர் நீர் தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்திற்கு நிலையாக உரித்தான நீர்ப்போக்கின் அளவு (limit flows) கணக்கிடப்படும். அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவு நீரை காவிரி ஆற்றின் வழி விடுவித்த பின்னரே மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகரில் நீரைத் தேக்கலாம் எனவும், மைசூர் மாநிலத்திற்கு சில பாசன வாய்ப்புகளும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால் தமிழக பாசனத்திற்கு நிலையாக உரித்தான நீர்ப் போக்கின் அளவு சிறிதேனும் குன்றாதவாறு, மைசூர் பாசன வாய்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1974-வது ஆண்டு வரை செயல்திறன் உடையதாக இருக்கும்.

கிருஷ்ணராஜசாகர் பாசனத்திற்காக 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர்களும் அப்போது மைசூரில் நிலவி வந்த ஒவ்வொரு பழைய பாசனக் காலின் கீழும் 1910-ம் ஆண்டு பாசனம் பெற்ற நிலப்பரப்பு

2 - க.ச.உ. (கா.பி.)