பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

காவிரிப் பிரச்சினை மீது

நிறைவேற்றி வருவது குறித்து இப்பேரவைத் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

காவிரி ஆற்றின் கீழ்ப் பகுதிகளில் உள்ள உழவர் பெருமக்களின் பாசன உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தைக் கருதி, 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கிடையிலான நீர்த் தகராறுகள் சட்டத்தின் கீழ் முறையாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் ஒன்றிற்குக் காவிரி நீர்த் தகராறைத் தீர்ப்புக்கு விடுமாறு தமிழ்நாடு அரசு 1970 பிப்ரவரித் திங்களிலேயே இந்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தும்கூட, தமிழ்நாட்டிற்குத் தொன்றுதொட்டு ஏற்பட்டு வந்துள்ள பரம்பரைப் பாசன உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் இந்திய அரசு தமிழ் நாட்டின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத இப்பிரச்சினை குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அளவு கடந்து கால தாமதம் செய்து வருவதை கண்டு இம்மன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதில் இந்திய அரசு மேலும் காலந் தாழ்த்தினால், மைசூர் அரசு தனது திட்டங்களை விரைவுபடுத்தி அவற்றைக் கட்டி முடிக்கும் விரும்பத் தகாத விபரீத நிலை உருவாவதற்கே அது வழி கோலுமென்றும், அதனால் பன்னெடுங் காலமாகத் தமிழ்நாடு அனுபவித்து வந்த பாசன உரிமைகள் பறி போய்விடும் என்றும் இப்பேரவை பெரிதும் அஞ்சுகிறது.

வேதனைமிக்க இத்தகைய சூழ்நிலையில், இந்திய அரசு 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான நீர்த் தகராறுகள் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் ஒன்றை அமைத்து : “இத் தகராறுகளுக்குத் தொடர்புள்ள தரப்பினர் அனைவருடைய நலன்களையும் கருதித் தமிழக அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளபடி காவிரி நீர்த் தகராறை அம் மன்றத்தின் தீர்ப்பிற்கு விட்டு நியாயம் வழங்குமாறும் நடுவர் மன்றம் இத் தகராறு குறித்து ஆய்ந்து முடிவு செய்து தனது தீர்ப்பை அளிக்கும் வரையில் மைசூர் அரசு தன் போக்கில் மேற் கொண்டுள்ள இத் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றக் கூடாதென அதற்குக் கட்டளையிடுமாறும், இந்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது".

தலைவர் அவர்களே, இந்தத் தீர்மானம் நம்முடைய தமிழ் நாட்டுக்கே உரிய பண்போடும், தமிழ்நாட்டு மக்கள் இந்திய ஒருமைப்பாட்டில் கொண்டிருக்கிற சிறப்பான நம்பிக்கையின்