கலைஞரின் சட்டமன்ற உரைகள்
47
நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது என்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை. தேர்தல் சமயத்தில் ட்ரிப்யூனலுக்கு விடப் போகிறேன் என்று சொன்ன பிறகும் அவர்கள் இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற பிறகும் ஏன் பயப்படுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை; அவர்கள் பெற்ற வெற்றியில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா என்று நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. ட்ரிப்யூனலுக்கு விடப்போகிறேன் பெங்களூரில் எடுத்துச் சொன்ன பிறகும் அங்கே மறுபடி தேர்தலுக்குப் பயப்படுகிறார்கள் என்ற வாதத்தில் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் சொன்னதைப் பற்றி சொல்லுகிறார்கள். நான் சி. எஸ்.க்காக வக்காலத்து வாங்கவில்லை. அவரே வக்கீல். சி. எஸ். என்ன சொல்லி இருக்கிறார் என்றால் தேர்தல் முடிந்த பிறகுதான் கவனிக்கப்படும் என்றார். ஏதோ இது மத்திய அரசிலிருந்து இந்திரா காந்தி பேசியது போல நான் கருதவில்லை. அவர் சொல்லி இருப்பது தேர்தல் முடிந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வந்த பிறகு அவர்களோடு பேச முடிவு காணலாம் என்ற கருத்தில்தான் சொல்லி இருக்கிறார்கள். அந்தக்கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களும் இதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கருத்தை அவர்கள் தன்னுடைய கட்சிக்காக பேசிய கருத்தாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.
கட்சி சார்பற்ற முறையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று டாக்டர் ஹாண்டே குறிப்பிட்டதை அடுத்து சொன்ன கருத்து இன்றைக்கு புதிய காங்கிரசு கட்சியினுடைய அரசு ஏற்பட்ட பிறகு மைசூர் மாநிலத்தில் ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படலாம். மத்தியில் புது காங்கிரசுடைய ஆட்சி. மைசூரில் பழைய காங்கிரசுடைய ஆட்சி. இந்திரா காந்தி அரசு தி.மு.க. ஆதரவுடன் இயங்கி வருகிறது. ஆகவே இந்திரா காங்கிரசுக்கு எதிராக பழிச்சொல் வருமே என்று தேர்தலுக்காக காத்திருந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்றைய தினம் நம்முடைய நிலைமை என்ன? மத்திய அரசின் உத்திரவை மத்திய அரசே மீறுகிற துர்ப்பாக்கியமான நிலைமை.