பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

காவிரிப் பிரச்சினை மீது

இருந்தாலும், அதிலே ஏறத்தாழ 300-க்கு மேற்பட்ட கிலோமீட்டர் நம்முடைய தமிழ் நாட்டிலே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் யாவரும் அறிவார்கள். உலகத்திலே உள்ள பல நதிகளில் காவிரியினுடைய மொத்தத் தண்ணீரையும் பாசன வசதிக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். 95 சதவிகிதம் பாசன வசதிக்குப் பயன்படுகின்ற ஒரு ஆறு காவிரி ஆறு என்று 1963-ஆம் ஆண்டு ஒரு கணக்குக் காட்டி அது உலக ஆறுகளோடு தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயும் காணக்கிடக்கின்றது. அதிகப் பாசன வசதிக்கு அது பயன்படுகின்றது என்றால், தமிழ் நாட்டுக்கு மாத்திரம் அது பயன்படவில்லை மைசூர் மாநிலத்திற்கும் அது பயன்படுத்தப்படுகின்றது. அதற்காக கிருஷ்ணராஜ சாகர் அமைக்கப்பட்டது. நம்முடைய தமிழ் நாட்டு உரிமைகள், நமது பாரம்பரிய பாத்யதைகள் குன்றிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மேட்டூரிலே அணைகட்டி, மேட்டூர் நீர்த்தேக்கத்தின் மூலமாக நமது பாத்யதை உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டது இருமுறை இந்த ஆறு குறித்து மைசூர் மாநிலத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அந்தக் காலகட்டம், 1892-ஆம் ஆண்டிலும், 1924-ஆம் ஆண்டிலுமாகும். இந்த இரண்டு ஒப்பந்தங்களின் முக்கிய ஷரத்துக்கள் என்னவென்றால்,

கிருஷ்ணராஜ சாகர் அணை இயங்குவது தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிப் பாசனத்திற்குத் தேவையான தண்ணீரை (லிமிட் ஃப்ளோ) எந்த விதத்திலும் குறைத்துவிடக்கூடாது என்பதாகும்.

இரண்டாவது தமிழக அரசு மேட்டூர் அணைப் பாசனத்தை மூன்று லட்சத்து ஓராயிரம் ஏக்கருக்கு அதிகமாக்காது என்பதாகும்.

மூன்றாவது காவிரியிலோ, அதில் வந்து விழுகின்ற ஒப்பந்தத்தில் இங்கு குறிப்பிட்டிருக்கின்ற துணை நதிகளிலோ தமிழக அரசின் முன் சம்மதம் இல்லாமல் மைசூர் அரசு எந்த வித அணைகளையும் கட்டக்கூடாது என்பதாகும்.

நான்காவது அணை கட்டுகிற முழு விவரங்களையும் மைசூர் அரசு தமிழக அரசுக்கு அறிவித்தாக வேண்டும்.