கலைஞரின் சட்டமன்ற உரைகள்
89
நான்கு கோடி தமிழ் மக்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்வது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
நாம் அடக்கத்தோடு சொல்வதை, பொறுமையோடு சொல்வதை கோழைத்தனம் என்று கருதுவார்களானால், அது நல்லதல்ல. அது எதிர்காலத்திலே நாம் கொள்ள வேண்டிய நட்புக்கு, உறவிற்கு, பொறுப்புணர்ச்சிகளுக்கு உகந்ததல்ல என்பதை நான் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நான் இன்னொன்றையும் சொல்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்தைக் கூட்டவேண்டுமென்று யோசித்து, காலையிலே பேரவையிலே இருந்த தலைவரிடத்திலே கலந்து பேசியிருக்கிறேன். இங்கே அறிவித்தால், பேரவையிலேயுள்ள சில பேருக்குக் கோபம் வந்துவிடுகிறது. காலையிலே கூட அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது. என்றாலும்கூட அங்கே நான் விளக்கத்தைச் சொன்னேன். கடிதம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். வந்துவிட்ட காரணத்தினால் சொல்கிறேன். 4-ஆம் தேதியன்று நான்கு மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டம் நம்முடைய தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைக்கு இதைப்பற்றியெல்லாம் நாம் விவரமாகப் பேசி ஏற்றதொரு முடிவை நிச்சயமாக எடுக்க முடியும். ஆனால், எந்த முடிவானாலும் நம்முடைய தமிழகத்திற்கு, தமிழ் நாட்டு மக்களுக்கு 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு மாறான முடிவாக இல்லாமல் பார்த்துக் கொள்வதிலும், அது மாத்திரமல்லாமல் நமக்கு மைசூர் அரசாலும், அல்லது மத்திய அரசின் அமைச்சராலும் எந்தக் கேடும் விளையாது பார்த்துக்கொள்வதிலும் இந்த அரசு தன்னுடைய பதவியைக்கூடப் பணயம் வைத்துப் போராடத் தயாராக இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, எதிர்க் கட்சித் தலைவரும், மற்றவர்களும் கட்சி சார்பற்ற முறையிலே இதிலே நாங்களும் போர்க் குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துச்சொன்னதை நான் மனமார, நெஞ்சார, இதயமார வரவேற்று, இந்த உணர்ச்சியொன்றே நம்முடைய தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்காலம் செழிப்படைவதற்குப் போதும் என்று எடுத்துக்கூறி, இந்த நிதி நிலை ஒதுக்கீட்டிலே மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் சொன்ன நல்ல பல கருத்துக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக்