பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 . காவிரி

இன்பத்தைக் காட்டிலும் சிறந்த இன்பம் வேறு இல்லை யன்றே. அத்தகைய இளமையைக் கொன்னே கழியவிட்டு ஈட்டிய அப்பொருள், அவ் விளமை கழிந்த முதுமையில் இன்பம் தருவது இல்லையாம். அதனால் நில்லா இயல் புடைய பொருளிட்டு முயற்சியில் நீ செல். யான் வாரேன்; நின் முயற்சி இனிது முடிவதாக,' (நற். 126) என்று கூறு கின்றான். இவ்வாறு, பொருள் வயிற் பிரியத் துணிதலும் அழுங்கலுமாக இருந்த தலைமகன் இறுதியில் ஒரு நாள் பிரியத் துணிந்து, பிரிந்து செல்லுதற்கு ஆவனபுரிந்து நிற்கின்றான்.

தலைமகன் பிரிதற்குத் துணிந்துள்ளான் என்பதைக் குறிப்பால் உணர்ந்த தலைமகள் வருந்துகின்றாள். அவள் வருந்து தற்கேற்ற காரணத்தை வினாவிய தோழிக்குத் தலைவி கூறுவாள், "தோழி! தலைவர், வெயிலின் வெப்பம் கருதி ஒதுங்கியிருத்தற்கும் இடம் அற்ற கொடிய வெப்பம் மிக்க காட்டிடத்தே சென்றுவிட்டனர். அதை யான் குறிப்பாற் கண்டுகொண்டேன். வேவின் விளங்கிய இலையை மாசு போகத் துடைப்பர்; கிடுகுப்படையினை யும் மயிற்பீலிசூட்டி மணியை அணியாநிற்பர். அன்றியும் பண்டே போலாது என்னையும் பலபடியாகப் பாராட்டிப் புகழ்வர். ஆதலின், இனி, என் அழகிய கண்கள் நீருள் மூழ்குங் காலம் வந்துவிட்டது போலும்,' என்கின்றாள்.

"ஒதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்

குறிப்பிற் கண்டிசின் யானே; நெறிப்பட வேலு மிலங்கிலை துடைப்ப; பலகையும் பீலி சூட்டி மணியணி பவ்வே, பண்டினும் நனிபல அளிப்ப: இனியே வந்தன்று போலுந் தோழி நொந்துநொந்து எழுதெழில் உண்கட் பாவை - அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே." (நற். 177).