பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு போலவே வாதிட்டுள்ளனர். படிக்கப் படிக்க அவ்வாதங்கள் சுவை பயக்கின்றன. இது தொடர்பாக,-இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது பொருந்துமா-பொருந்தாதா-என்னும் தலைப்பில் பட்டி மன்றங்களும் வழக்காடு மன்றங்களும் இக்காலத்தில் 'கம்பன் விழா என்னும் நாடக அரங்குகளில் நடைபெறு கின்றன. பொருந்தும் எனச் சிலரும் பொருந்தாது எனச் சிலரும் வாதிடுகின்றனர். இராமாயணம் இராமனுக்குப் பெருமை சேர்க்கும் நூல் ஆதலின், நடுவரா யிருப்பவர், இராமன் செய்தது பொருத்தமே எனத் தீர்ப்பு கூறுவதே பெரும்பாலா யுள்ள நடைமுறை. இராமன் செய்தது பொருந்தாது என்று ஒருவர் ஒருமுறை தீர்ப்பு கூறியதற்காக அவரைப் பின்னால் தாழ்த்திப் பேசியவர்களும் உளர். இங்கே நாம் மேற்கொள்ளப் போகும் தீர்ப்பைப் பற்றி ஒரு சிறிது ஆய்வு செய்ய வேண்டும். - மிகவும் உயர்ந்தவனாகக் கூறப்பட்டுள்ள இராமன் மறைந்திருந்து வாலியைக் கொன்றது தவறேயாகும். ஆனால் சூழ்நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கே, இராமன் தெய்வப் பிறவி என்பதை மறந்துவிட்டு மனித னாகவே கொள்ளல் வேண்டும். இராமன் சுக்கிரீவனின் துணையை நாடியது தன்னலமே. இழந்து விட்ட தன் மனைவியை மீட்க எப்படியாவது முயல வேண்டும்; அதனால் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு உதவ வேண்டும். தன்னலம் ஒருபுறம் இருக்க, வாலி மற்றொருவனுடைய (சுக்கிரீவனுடைய) மனைவியைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதை அறிந்ததுமே, மனைவியைப் பறி கொடுத்த இராமனுக்கு வாலிமேல் கடுமையான வெறுப்பு ஏற்பட் டிருப்பது மனித இயற்கையே. எனவேதான் மறைந்திருந்து வாலியைக் கொன்றான். இங்கேயுள்ள இராமன் மனிதனாயிற்றே.