பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு


சிக்கல் உடையவர்கள் கழிவறையில் குந்தியிருக்கும்போது இவ்வாறு இருந்தால் மலம் கழியும் என்பர். அதாவது, மன ஒருமைப்பாடு இச்செயலால் உண்டாகுமாம். மும்மலங்கள் கழியவும் இந்த யோக நிலை உதவும்.

தாமரை இருக்கை

சுயம் பிரபை தாமரை இருக்கை (பத்மாசனம்) போட்டு அமர்ந்திருந்தாள். அடி வயிற்றின் கீழ்ப் பகுதி (அல்குல்) இரண்டு தொடைகட்குள் ஒடுங்க, இடை தளராது நிமிர்ந்த நிலையில் இருக்கச் செய்து, இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மேல் வைத்து, இரண்டு முலைகளின் சுமை குறையும் படியாக மூச்சை நடுவில் நிறுத்தி அமர்ந்திருந்தாள்:

"தேரனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும் ஊருவின் ஒடுங்குற ஒடுக்கி உற ஒல்கும் நேரிடை சலிப்பற நிறுத்தி நிமிர்கொங்கைப் பாரம் உள்ஒடுக்குற உயிர்ப்புஇடை பரிப்ப' (47)

அல்குலுக்குத் தேரை ஒப்புதல் சொல்லுதல் இலக்கிய மரபு. கதலி= வாழை. ஊரு = தொடை. பெண்களின் தொடைக்கு வாழை ஒப்புமை. "துடை வாழை மேல் மடவார் அல்குல் பாம்பு தொட மயங்கி” என்பது நால்வர் நான்மணி மாலைப் பாடல். கம்பரே சில இடங்களில் கூறியுள்ளார். நாட விட்ட படலத்தில் அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பில்' (36)

என்று கூறியுள்ளார். (அரம்பை= வாழை. குறங்கு= தொடை) தாமரை இருக்கையில் அல்குல் பகுதி இருதொடை கட்குள் ஒடுங்கியிருக்கும். நேர் இடைசலிப்பு அற= இடுப்பு தளர்தல் இன்றி நேராய் நிமிர்ந்திருந்ததாம். கொங்கை = முலை. பாரம்= சுமை. மூச்சை நடுவில் நிறுத்திப் பயிற்சி செய்யின், கொங்கையின் பருமன் குறையுமாம்.