பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு வைத்துக் காம இன்பம் நுகர்ந்துகொண்டிருந்தான். நான் அவளுக்குத் துணையாய் இருந்தேன். மயன்மேல் சினங் கொண்ட இந்திரன் மயனைக் கொன்று அப்பெண்ணின் மேல் சினங்கொண்டான். என் மீதும் சினங்கொண்டு நீ இங்கேயே கிடப்பாயாக என்று வைவு (சாபம்) கொடுத்தான். சீதையைத் தேட வானரர்கள் இங்கே வரும்போது நீ விடுதலை அடைவாய் என வைவுக்கு விடுவிடுப்பும் செய்தான் - எனக் கூறினாள். பின்னர், அனுமன் பேருருக் கொண்டு, குகையின் மேல் பகுதியை உடைத்தெறிந்தான். சுயம்பிரபை வெளியே சென்று வீடுபேறு எய்தினாள். பின்னர் அனுமன் முதலியோர் நெடுந்தொலைவு நடந்து சென்று ஒரு பொய்கைக் கரையை அடைந்தனர். ஞாயிறும் மேற்கு மலையில் (அத்தகிரியில்) மறைந்தான்: "மாருதிவலித் தகையைப் பேசி மறவோரும் பாரிடை நடந்து பகல் எல்லை படரப்போய் நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார் தேருடை நெடுந்தகையும் மேலைமலை சென்றான்” (73) வழி கடப்பவர்கள் பேசிக்கொண்டே செல்வதுண்டு. அதனால் களைப்பு தெரியாது. அவ்வாறே, வானரர்கள் அனுமனின் வலிமையைப் பேசிக்கொண்டே சென்றார்களாம். பகல் எல்லை = பகலின் முடிவு - அந்தி மாலை, தேருடைய நெடுந்தகையாகிய ஞாயிறும் வழிகடந்து மேலைமலை அடைந்தான் என்பதில், நெடுந்தகையும் என்பது இறந்தது தழுவிய எச்ச உம்மையாகும்.