பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 27 "இழிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே' . (மெய்ப்பாட்டியல்-5) என்னும் தொல்காப்பிய நூற்பா, இழவு - அதாவது இன்றியமையாத எதையாவது இழத்தல் காரணமாக அழுகை வரும் என்று கூறுகிறது. சீதையைப் பிரிந்த இராமனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது இயற்கைதானே! இரும்பைத் தோய்த்த தண்புனல் சீதையை எண்ணி வருந்திய இராமன், இலக்குவனால் திசை திருப்பப் பெற்று மாலைக்கடன் இறுக்கப் பொய்கை யில் நீராடினான். காம வேதனையால் சூடுண்ட அவனது உடம்பு மூழ்கியதும் பொய்கை நீர்,கம்மியன் சூடுபண்ணிய இரும்பைத் தோய்த்ததும் வெப்பமான நீர்போல் கொதித்தது. பாடல்: "நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும் தீத்த காமத் தெறுகதிர்த் தீயினால் காய்த்து இரும்பைக் கருமகக் கம்மியன் தோய்த்த தண்புனல் ஒத்தது அத்தோயமே (36) பிரிந்தால் சுடுவதும் சேர்ந்தால் குளிரச் செய்வது மாகிய நெருப்பை இவள் எங்கே பெற்றாள் என்னும் கருத்துடைய. - 'நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்' (1104) என்னும் குறள் எண்ணத்தக்கது. சீதையைப் பிரிந்ததால் இராமனது உடல் கொதித்தது என்பதற்கு இந்தக் குறட்பா சான்று பகரும். நீத்த நீர் = நீந்த வேண்டிய அளவுக்கு ஆழமான வெள்ளநீர். கருமகக் கம்மியன் = கம்மாளருள் இரும்பு வேலை செய்யும் கருமான். தோயம் = நீர்.