பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு அனுமன் கண்ட தோற்றம் இராம இலக்குவரின் தோற்றம் கண்ட அனுமன், இவர்கள் பெருந்தன்மை உடையவர்களாய்க் காணப் படுவதோடு. இந்திரனும் அஞ்சும் பெருமித வாழ்வினராயும், தருமதேவனும் அஞ்சும் நல்லொழுக்கத்தினராயும், மன்மதனும் அஞ்சும் அழகர்களாயும் எமனும் அஞ்சும் வலிமை உடையவராயும் தோற்றம் அளிக்கின்றனர் என எண்ணி வியக்கிறான்: - "சதமன் அஞ்சுறும் நிலையர், தருமன் அஞ்சுறு சரிதர், மதனன் அஞ்சுறு வடிவர், மறலி அஞ்சுறு விறலர்' (8) சதமன் = இந்திரன், மதனன் = மன்மதன்; மறலி = எமன்; செல்வம், ஒழுக்கம், அழகு, மறம் (வீரம்) என்னும் நான்கும் உடையவர் என்பது இப்பகுதியால் விளங்கும். சொல்லின் செல்வன் அனுமன் துணிந்து இராம இலக்குமணரை அடைந்து உங்கள் வரவு நல்வரவாகுக என வரவேற்றான். உடனே இராமன், நீ எங்கிருந்து வருகிறாய் - நீ யார்? என வினவினான். அதற்கு அனுமன், நான் காற்றுத் தேவனுக்கு அஞ்சனை என்பவள் வயிற்றில் பிறந்தவன்; என் பெயர் அனுமன்; இம்மலையில் வாழும் ஞாயிற்றின் மகனாகிய சுக்கிரீவனுக்கு ஏவல் செய்பவன்; உங்களைப் பற்றி அறிந்து வரும்படி அவன் அனுப்பியதால் இங்கு வந்தேன் - என்று விடையிறுத்தான். "கஞ்சம்ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்’ (15)