பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நட்புக்கோள் படலம் இராமனும் சுக்கிரீவனும் நட்பு கொண்டதை விளக்கும் படலம் இது. இந்தத் தலைப்பு, நட்புப் படலம், சுக்கிரீவன் நட்புப் படலம். சுக்கிரீவன் நட்புப்புரி படலம் என்றெல்லாம் சில சுவடிகளில் வேறுபட்டுள்ளது. அருகடம் புரிதல் . இராமனிடம் சுக்கிரீவனை அழைத்துவரச் சென்ற அனுமன், சுக்கிரீவனை நோக்கி, வலிய வாலியைக் கொல்லும் எமன் வந்து விட்டான்; நாம் துன்பக் கடலைக் கடந்து விட்டோம் என்று கூறி, ஆலம் உண்ட சிவனைப் போல அருநடனம் புரியலானான்: மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார் வாலியென் றளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா ஆலமுண் டவனின் கின்று அருகடம் புரிகுவான்” (2) மேலவன் = ஞாயிறு, திருமகன் = சுக்கிரீவன். ஆலம் உண்டவன் சிவன். இன்னும் துன்பக் கடலைக் கடக்க வில்லை. இருப்பினும், உறுதி பற்றிக் கடந்தனம் என இறந்த காலத்தால் கூறியுள்ளான். இவ்வாறு சில காரணங் களால் காலமாறுபாடு ஏற்படுவதுண்டு என இலக்கணநூல் கூறுகிறது. 'விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் பிறழவும் பெறுஉம் முக்காலமும் ஏற்புழி’ என்பது நன்னூல் (பொதுவியல்-33) நூற்பா. இங்கே தெளிவு என்பது உறுதியைக் குறிக்கிறது.