பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 45 கேட்டுத் தெரிந்து கொண்ட கல்வியும் சேர்ந்துள்ள நிலைமை போன்றும் இருந்ததாம்: "கூட்டமுற் றிருந்த வீரர் குறித்ததோர் பொருட்கு முன்னாள் ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் வீட்டுவாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்கக் கேட்டுணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார்’ (22) கூட்டமுற் றிருந்த வீரர் = கூடி அமர்ந்துள்ள இராமனும் சுக்கிரீவனுமாகிய வீரர்கள். இப்பாடலில், இருவரின் கூட்டத்திற்கு இரண்டு வகை உவமைகள் கூறப்பட்டுள்ளன. முதல் உவமை, முந்திய தவமும் இப்போது செய்யும் முயற்சியும் சேர்ந்தமை. இந்த உவமையால் அறியப்படுவ தாவது முன் பிறவியில் நாம் நல்லது செய்த நல்லூழ் இருந்தால் காரியம் தானேகைகூடும் என்று இருந்தால் போதாது; இப்போதும் முயற்சி செய்ய வேண்டும் என்பது. முயற்சி திருவினையாக்கும். ஈண்டு, “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்” (620) என்னும் குறள் எண்ணத் தக்கது. மற்றோர் உவமையாவது; கேள்விக் கல்வியும் இயற்கை யான மெய்யறிவும் சேர்ந்து கொண்டது. இங்கே உள்ள கேட்டுணர் கல்வி என்பது ஆய்வுக்கு உரியது. உலகில் எந்த மொழியிலும் சரி - எழுத்து கண்டு பிடித்து எழுதிக் கற்பதற்கு முன், ஒருவர் வாயால் சொல்ல மற்றவர் காதால் கேட்டறிந்து கற்றதே கல்வி எனப்பட்டது. வட மொழி வேதம் அவ்வாறே பயிற்றப்பட்டது-பயிலப்பட்டது. இதனால் வேதம் எழுதாக் கிளவி எனப்பட்டது. இப்போதும் ஆப்பிரிக்கக் காட்டு வாசிகள் சிலர், வாய் வழி. செவி வழியாகவே கல்வி பெறுவதாகச் சொல்லப்படுகிறது.