பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை அழியா வரம் பெற்ற அருமைத் தமிழ் மொழிக்குக் கம்பர் பெருமான் வழங்கிய ஒப்பற்ற காவிய அணி கம்பராமாயணம். இராம காதையாகிய வடமொழிக் காவியத்தை வால்மீகி முனிவர் படைத்தார். அதை அடிப்படையாகக் கொண்டு கம்பர் தமது இராம காதையைப் படைத்திருப்பினும், மூலத் திலிருந்து கம்பர் பெருமான் பல இடங்களில் மாற்றங்களைச் செய்துள்ளார். ஆறு காண்டங்களுக்குள் தமது காவியத்தைச் சிறப்புற அமைத்துள்ள கம்பர் பெருமானின் மொழிப் புலமை, கற்பனைத் திறன், சொல்லாட்சி, வடிவமைப்பு, புராண அறிவு, பொது நோக்கு, கதை சொல்லும் திறன் போன்றவைகளை உணராத தமிழர் இருக்கமாட்டார். ஆறு காண்டங்களில் ஒன்றான கிட்கிந்தா காண்டம் என்னும் பகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களின் மூலம், ஏனைய தமிழ் இலக்கிய நூல்களின் செய்யுட்களையும் ஒப்புமைப்படுத்தி, முனைவர் திரு. சுந்தர சண்முகனார் கிட்கிந்தா காண்டத் திறனாய்வு என்னும் இந்நூலைப் படைத்துள்ளார்; கம்பரது கவித்திறமையை உரைத்துப் பார்த்து, உண்மையை உணர வைத்து உச்சி முகர்ந்து பாராட்ட வைக்கிறார். நமது குழந்தையின் அருமை பெருமையை நம்மிடமே எடுத்துச் சொல்லி நம்மையே வியப்புக்குள்ளாக்குகிற உத்தி இதில் பாராட்டு முகமாய்க் கையாளப்பட்டுள்ளது. - இந்நூலை வெளியிட உதவிய புதுவைக் கம்பன் கழகத்தாருக்கும், அதன் செயலாளரான கம்பவாணர் திரு. அ. அருணகிரி அவர்கட்கும், நூலாசிரியர் அவர்கட்கும், அழகுற அச்சிட்டுத் தந்த சபாநாயகம் அச்சகத்தினருக்கும் மனமார்ந்த நன்றி. - அன்புடன் வானதி ஏ. திருநாவுக்கரசு