பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 61 கையும் காலும் இறந்து கிடக்கும் துந்துபியின் உடலைத் தூக்கி எறியும் படி இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிட்டான். வாலி கையால் எறிந்ததை இலக்குமணன் கால் விரலினால் எற்றி எறிந்தான். 'கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் வாள்தொழில் இளவலை, இதனை மைந்த நீ ஒட்டுஎன அவன் கழல் விரலின் உந்தினான் மீட்டு அது விரிஞ்சன் நாடுஉற்று மீண்டதே' (15) என்பது பாடல். அமலன் = இராமன். இளவல் = தம்பி (இலக்குவன்). மைந்தன் = வலிமை உடையவன். மைந்து = வலிமை. கழல் = வீரக்கழல் என்னும் காலணி, இது ஆகுபெயராய்க் காலை உணர்த்திற்று. தானமாகிய காலில் உள்ள தானியாகிய கழல் தானத்திற்கு ஆகியதால் இதைத் தானியாகு பெயர் என்பர். இடத்தில் உள்ள பொருள் அதாவது இடப்பொருள் இடத்திற்கு ஆகியதால், தமிழில் இதனை இடப்பொருள் ஆகுபெயர் எனலாம். இலக்குவன் எறிந்ததும் அவ்வுடல் நான்முகன் உலகம் வரையும் சென்று மீண்டுவந்து கீழே விழுந்ததாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள சிறப்பாவது: இராமனது வலிமையை அறிய இராமனிடம் இந்த வேலையைச் சுக்கிரீவன் விட்டான். தம்பியுளான் படைக்கு அஞ்சான்’ என்றபடி இதை இராமன் தம்பியிடம் விட்டான். தம்பியோ, வாலி கையால் எறிந்ததைத் தன் கால் விரலாலேயே எறிந்து தன் வலிமையை வெளிப்படுத்தினான். இதனால், இராம இலக்குமணரின் வலிமையை வானரர்கள் அறிந்து இவர்கள் வாலியைக் கொன்று வெல்வது உறுதி என நம்பி மகிழ்ந்தனர்.