பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 67 'ஆன்பாற் றெண்கடல் அமுதுற வளைஇய தேன்பெய் மாரியின்" (1:34:101-2) 'ஆன்முலைப் பிறந்த வால்கிற அமுதம் மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு” (2:8:11-12) எனவும், ஒளவையாரின் நல்வழியில் "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” (காப்பு) எனவும், இராமலிங்கரின் அருட்பாவில் 'வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால்... தேன்கலந்து பால்கலந்து' எனவும் வந்துள்ள ஆட்சிகளைக் காணலாம். இதிலிருந்து அறியக்கூடிய கருத்து ஒன்று உண்டு. இப்போது நாம் பாலில் சர்க்கரையும் அல்லது கற்கண்டும் சேர்த்துப்பருகுவது போல், பாலில் தேன் கலந்து பருகுவது உண்டு என்பது அது. சர்க்கரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காலத்தில் பாலில் தேன் கலந்து பருகியிருக்கலாம். இப்போதும், பாலில் தேன் கலந்து பருகின், இரண்டும் கலந்த ஒரு புதுச் சுவையை நுகரும் இன்பத்தோடு உடலும் வலுப்பெறும். இராமனும் சுக்கிரீவனும் பாலும் தேனும் கலந்தாற் போன்ற நெருங்கிய-நயமான நட்புக் கொண்டனர் எனில், பால் யார்? தேன் யார்? பால் தரையில் கிடைப்பது. தேன் மலையில் கிடைப்பது, தேன் கீழே கிடைப்பினும் மலைத் தேனுக்கே மதிப்பு மிகுதி, இங்கே, மலைப் பெய் நெய்யொடு” என்னும் பெருங்கதைப் பகுதி நினைவு கூரத்தக்கது. நாட்டில்-தரைப்பகுதியில் பிறந்து வளர்ந்து வந்தவன் இராமன். கிட்கிந்தை என்னும் மலைப்பகுதியில் பிறந்து வளர்ந்து வந்தவன் சுக்கிரீவன், எனவே, இராமனைப் பாலாகவும் சுக்கிரீவனைத் தேனாகவும் உய்ந்துணர்ந்து கொள்ளலாம்.