பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 7| உடையானாய்க் காணப்பட்டான். அவன் இராமனது துணையை நாடியது தன் மனைவியையும் தன் உரிமைகளை யும் மீட்பதற்காகத்தான். ஆனால், சீதையைப் பிரிந்த இராமனது துயரைப் பொறுக்க முடியாதவனாய், ஐயனே, எனது சிறு குறையை முடிப்பது அப்புறம் ஆகுக - முதலில் சீதையைத் தேடிக் கண்டு மீட்டுவரும் செயலைக் கவனிக்க வேண்டும் - என்று சுக்கிரீவன் கூறினான். "என்னுடைச் சிறுகுறை முடித்தல் ஈண்டு ஒரீஇப் பின்னுடைத் தாயினும் ஆக பேதுறு மின்னிடைச் சனகியை மீட்டு மீள்துமால் பொன்னுடைச் சிலையினாய் விரைந்துபோய் என்றான்” (18) என்பது பாடல். அவரவர்க்கு அவரவர் தேவை பெரிதாய்த் தோன்றலாம். ஆனால், சுக்கிரீவன், இராமனது குறையை நோக்கத் தனது குறையைச் சிறுகுறை என்று பெருந் தன்மையுடன் குறிப்பிட்டுள்ளான். ஈண்டு ஒரீஇ = இப்போது எனது குறையைக் கிடப்பில் போட்டு அதாவது கைவிட்டு. ஒரீஇ = சொல்லிசை அளபெடை. முதலில் இராமனது குறையை விரைந்துபோய் முடிக்க வேண்டும் என்கிறான். விரைந்துபோய்’ என்பது மிகவும் பொருள் பொதிந்தது. பொன்னுடைச் சிலையினான் = இராமன். இத்தகைய உயரிய பண்பை அனைவரும் பின்பற்றும் நாள் எந்நாளோ? தெரிவையர் யார்? சுக்கிரீவன் சொல்லியதைக் கேட்ட இராமன் அவனிடம் கூறுகிறான்: சுக்கிரீவ தீவினையேனாகிய யான் வில் ஏந்திய கையுடன் இருக்கும்போதே சீதை அணிகலன்களைத் துறந்து விட்டாள். அணிகலன்கள் பூண்ட கற்புடைய பெண்டிருள் இங்ங்ணம் செய்தவர் யார்? என்றான்.