பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு தட்டியபோது அவற்றில் அணிந்திருந்த வாகுவலயங்களில் உள்ள மணிகள் மின்னலைப்போல் சிதறிச் சிந்தினவாம். 'கடித்தவாய் எயிறுகு கனல்கள் கார் விசும்பு இடித்தவாய் உகும் உரும் இனத்தின் சிந்தின தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசரோ” (20) மின்னலும் இடியும் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பலருக்கு இந்தக் காலத்திலும் தெரியாதிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்திலேயே கம்பர் தெளிவாகத் தெரிவித்துப் போந்துள்ளார். முகில்கள் ஒன்றோடொன்று மோதும் போது நெருப்பு உண்டாகிறது - இது தான் மின்னல். அதே நேரத்தில் மோதும் ஒலியும் உருவாகிறது - இது தான் இடி. மின்னல் ஒலியை விட விரைவு உடைய தாகலின் முதலின் தெரிகிறது; அதன்பின் ஒலி கேட்கிறது. முதலில் மின்னல் கண்ணுக்கும், பின்பு ஒலி காதுக்கும் எட்டினாலும், இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வனவே. ஓர் ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டு, எதிர்க்கரையில் ஒருவர் துணி தோய்ப்பதைக் கவனிக்கும்போது, அவர் கல்லில் அடிப்பது முதலின் கண்ணுக்குத் தெரியும் - சிறிது நேரம் சென்ற பின்பே அடித்த ஒலி காதுக்குக் கேட்கும். இதே அடிப்படையில்தான் மின்னலும் இடியும் நமக்குத் தென்படுகின்றன. இதைத்தான் கம்பர், கார் விசும்பு இடித்தவாய் உகும் உரும் இனம் என்றார். கார் = மேகம், விசும்பு = விண்ணில், இடித்தவாய் = மோதிய பகுதியிலிருந்து. உகும் தோன்றுகிற, உரும் இனம் = இடியின் தொகுதி . எனப் பொருள் கொள்ளல் வேண்டும். பற்கள் ஒன்றோ டொன்று கடிபடும்போது நெருப்புத் தோன்றுவதாகக் கம்பர் கூறியிருப்பது, வாலியின் சினத்தின் மிகுதியையும், கடிப்பின் விரைவையும் அழுத்தத்தையும் அறிவிப்பதற்காம்.