பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 89 'வாழைப் பழத்தில் ஊசி நுழைந்தாற் போல’ என்னும் பழைய பழமொழி ஒன்றுண்டு. இந்தக் காலத்தில் சில ஊசிகள் கனிந்த வாழைப் பழத்தில் புதுவதுகூடக் கடினமா யுள்ளன. இராமன் எய்த அம்பின் கூர்மையையும் விரைவையும் ஆற்றலையும் விளக்கிக் காட்டுவதற்காகக் கம்பர் வாலியின் மார்பின் திண்மையைக் கற்பனை செய்து காட்டியுள்ளார். ஐம்பூதங்களின் தோற்றம் விண்ணிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் (மண்ணும்) தோன்றியதாக முறைவைப்பு செய்யப்படுவது ஒருமுறை. இங்கே நீரைத் தரும் நெருப்பு என்னும் பொருளில் நீர்தரும் நெருப்பு என்பது அமைந்துள்ளது. காற்றும் நெருப்பும் நீரும் திண்மை (கெட்டித் தன்மை) உடையன அல்ல வாயினும், யாராலும் வெல்ல முடியாத வன்மை (வலிமை) உடையன. பாரோ (நிலமோ) வன்மையுடன் திண்மையும் உடையது. இதனைத் திருவதிகை மனவாசகங் கடந்தார் இயற்றிய உண்மை விளக்கம் என்னும் நூலில் உள்ள ‘மண் கடினமாய்த் தரிக்கும் (9) என்னும் பாடல் பகுதி யாலும் அறியலாம். 'கடினம் என்பது செறிவு - இறுக்கம் (Density) என்னும் பொருளைக் குறிக்கும். காற்று, தீ, நீர் ஆகியவற்றை விட மண் இறுக்கம் உடையது என்று சொல்வது மட்டும் போதாது. மண்ணுலகம் எனப்படும் பூமி (Earth) ஞாயிற்றை விடவும் மற்ற கோள்களை விடவும் மிகவும் வலிய இறுக்கம் (Density) உடையது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. - பூமி ஒரு முழுப்பங்கு இறுக்கம் உடையதெனில், அதை நோக்க, ஞாயிறும் மற்ற கோள்களும் எவ்வளவு இறுக்கம் உடையன என்பதைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.