பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 91 நேமிதான் கொலோ நீலகண்டன் நெடுஞ் சூலம் ஆமிதாங் கொலோ அன்றெனில் குன்றுருவு அயிலும் நாம இந்திரன் வச்சிரப்படையும் என் நடுவண் போமெனும் துணை போதுமோ யாதெனப் புழுங்கும்” (73) நேமி = சக்கரம். குன்று - கிரவுஞ்சம் என்னும் மலை. அயில் = வேல். நடுவண் = மார்பின் நடுப்பகுதி. திருமாலும் சிவனும் முருகனும் இந்திரனும் பலமுறை போர் புரிந்துள்ளமையால் இங்கே இடம் பெற்றுள்ளனர். அவ்வள வாகப் போர் புரியாத நான்முகன் ஈண்டு இடம்பெற வில்லை. மேலும் வாலி எண்ணுகிறான்: இந்தப் படையை வில்லினால் எய்ய முடியாதே - எப்படி வந்தது - என வியக்கிறான். அல்லது முனிவர் யாராயினும் தம் சொல்லின் ஆற்றலால் (மந்திர பலத்தால்) இவ்வாறு எய்யச் செய்திருப்பரோ என நினைத்துப் பார்க்கிறான்: . "வில்லினால் துரப்பரிது இவ் வெஞ்சரம் என வியக்கும் சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்” (74) ஈண்டு, 'வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை' (872) என்னும் குறள் நினைவுகூரத் தக்கது. பெரியோரின் - முனிவரின் - புலவரின் சொல்லுக்கு மிகுந்த ஆற்றல் உண்டு என்பது இதனால் பெறப்படும். பின்பு வாலி, தன் கைகளாலும் கால்களாலும் வாலினாலும் வன்மைகொண்ட மட்டும் இழுத்துப் பார்த்து அது அம்பு என அறிந்தான். அம்பைப் பறித்த மார்புப் பகுதியிலிருந்து குருதி கடலெனப் பெருக்கெடுத்து ஒடிற்று.