பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

15


பள்ளியில் மாணவனாக இருந்த பொழுது, என் சகமாணவர்களுடன் அந்த நிலத்தரையின் மீது, கிரிக்கெட்டும் இன்னும் மற்ற விளையாட்டுக்களையும் விளையாடி இருக்கிறேன். என்று குறிப்பிடுகின்றார். ஆகவே, இங்கிலாந்தில் கிரிக்கெட் தோன்றியது. அங்கே தான் இந்த பெயரும் இடம் பெற்றது என்றும் கூறவே இந்த சான்றுகளைக் காட்டியிருக்கிறார்கள்.

இனி, மெரிலிபோன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் செயலராக விளங்கிய ரெயிட் கெர் (Rait Kerr) என்பவர் எழுதிய குறிப்பின்படியும், இங்கிலாந்தில் தான் கிரிக்கெட் ஆட்டம் தோன்றியது, வளர்ந்தது. பெரும் ஆட்டமாகப் பெருகி பரவியது என்ற குறிப்புக்களையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

கிராமப்புற ஆட்டம்

கிரிக்கெட்டின் வரலாறு, ஆராய்ச்சியாளர்கள் குறிப்புக்களுக்கு எட்டாத ஒன்றாகும். 1744ம் ஆண்டில் தான் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு சில விதிமுறைகள் உருவாயின. அதற்கு முந்தைய காலங்களில், கிரிக்கெட் எந்த முறையில், எந்தவிதமான விதிகளுடன் எப்படி ஆடப்பெற்றது என்பதே தெரியாத இருண்டகாலமாக இருந்தது. ஆனால் குறிப்புக்கள் எல்லாம் அச்சுப்பிரதிகள், எழுத்தோவியங்கள் இவற்றின் அடிப்படையில் கற்பனை சேர்ந்த கலவையாகவே வெளிவந்தன. ஆனால், ஒன்று மட்டும் உண்மையாக உலவியது. அது, கிராமப்புறத்தில்தான், கிரிக்கெட் ஆட்டம் தோன்றியது என்பது தான்.

அது, இங்கிலாந்து நாட்டில் கென்ட் மாகாணத்தில் உள்ள வீல்டு கிராமம்,மற்றும் சரே (Surrey) சசக்ஸ் (Sussex) போன்ற பகுதிகளில், கிராமப்புற மக்களுக்கு ஒரு வகை பொழுது போக்கு ஆட்டமாகத் தொடங்கியது என்கிற கருத்தை, எல்லா ஆராய்ச்சியாளர்களுமே மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.