பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

25


40,000, ரூபாயிலிருந்து ரூபாய் 80,000 வரை ஏறியிருந்தது என்றால் பணக்காரர்களின் பேய் தனமான சூதாட்ட வெறிதான் காரணமாக அமைந்திருந்தது!.

இவ்வாறு பணம் கட்டி ஆட, சோம்பேறிகளான சூதாடிகள் பலர் ஒரு கூட்டமாகவே இருப்பார்களாம். அந்த பயங்கர சூதாடிகள், தாங்கள் நேரில்போய் ஆடுவதற்குக் கூட இயலாமல் சோம்பல்பட்டு, கூலிக்கு ஆட்களை அமர்த்தி, போய் பந்தயம் கட்டி ஆடச் செய்வார்களாம். பெருந்தன்மைமிக்க பிரபுக்கள் பலர் இப்படி ஆட்களை அமர்த்தி ஆடும் பழக்கம் கொண்டவர்களாகவும் விளங்கியிருக்கின்றார்கள்.

பந்தயம் கட்டிக் கொண்டவர்கள், தங்கள் ஆட்டத்தின் முடிவுக்காகக் காத்திருக்காமல், தங்கள் பக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டாத வழிகளையும், குறுக்கு முறைகளையும், தந்திர யுக்திகளையும் கையாண்டதாக பல குறிப்புக்கள் வரலாற்றில் சுவையாகக் கூறிச்செல்கின்றன.

ஒரு சமயம், ஒரு குழுவின் சிறந்த ஆட்டக்காரரை, அன்று அந்தக் குழுவில் ஆட விட்டுவைத்தால், அவர் குழு வென்று, தன் குழு தோற்றுவிடும் என்பதை உணர்ந்த ஒரு பந்தயம் கட்டிய சூதாடி, அந்த ஆட்டக்காரரின் மனைவி இறந்து விட்டாள் என்ற பொய் சேதியை அவருக்குத் தெரிவிக்கச் செய்து ஆடவிடாமல் செய்ததாகவும் ஒரு குறிப்பு உரைக்கின்றது!

இவ்வாறு, குதிரைப் பந்தயத்திலும், குத்துச்சண்டைப் பந்தயத்திலும் பணங்கட்டி ஆடுவதைப் போல, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் இடையே கிரிக்கெட் ஆட்டம் சிக்கிச் சீரழிந்தது. பல இடங்களில், ஒரே சமயத்தில் போட்டி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன. தெரிந்தோ தெரியாமலோ, போட்டிகள் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றதால், எந்த இடத்திற்கு போவது என்பதிலும் குழப்பம் கொள்ளத் தொடங்கினர் சூதாடிகள்.