பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இப்படியாக ஆட்டத்தில் ஒவ்வொரு நுணுக்கமும் மலர்ந்து மலர்ந்துவர, ஆட்டம் மெருகேறிக்கொண்டே வந்தது. பந்தின் கனம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற நியதியை உண்டாக்கி, பந்தானது 51/2 அவுன்சுக்கும் 53/4 அவுன்சுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்கள்.

பந்தாடும் தரையில் (Pitch) ஆடுகள் மேய்ந்து தரையை நாசம் விளைவித்ததும் பல காரணங்களுள் ஒன்றாயின. அதனால் பந்தாடும் தரையை உருட்ட வேண்டும், அதுவும் கனமான இரும்பு உருளையால் (Heavy Roller) உருட்ட வேண்டும் என்று தீர்மானித்து, அதனை முதன்முதலாக லார்டு மைதானத்தில் 1870ம் ஆண்டு செய்தனர். அதுவே முறையான பழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பந்தாடும் தரையை பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து, 1872ம் ஆண்டு, லார்டு மைதானத்திலேயே சோதனையாகச் செய்து பார்த்தனர். அதுவும் வெற்றிகரமாக செயல் படவே, அதுவும் விதிமுறையாக்கப்பட்டது.

ஒரு பந்தெறித்தவணைக்கு (Over) 4 முறை பந்தெறியலாம் என்ற முறையை மாற்றி, 5 முறை எறிந்து கொள்ளலாம் என்ற புதுவழியைப் புகுத்தினர். 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கத்தில் இருந்து வந்த நான்கு முறை பந்தெறிவதை இங்கிலாந்தில் 5 முறை என்று உயர்த்தினாலும், 1900ம் ஆண்டு ஆறு முறை எறியலாம் என்று மீண்டும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

எனினும், ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் மேலும் ஒரு படி முன்னேறி, ஒரு பந்தெறித்தவணைக்கு 8 முறை எறியலாம் என்று விதியமைத்துக் கொண்டு ஆடியிருக்கின்றார்கள்.