பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

49


இந்த இரண்டு குறிக்கம்பு அமைப்பும் சிறு கதவு போலவே அமைத்து விட்டிருந்தால், விக்கெட் என்றே அக்கால ஆட்டக்காரர்களால் அழைக்கப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் இங்கிலாந்து முழுமையும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக விக்கெட்டை வைத்துக் கொண்டு ஆடவில்லை. வசதியுள்ளவர்கள், வசதி இல்லாதவர்கள் எல்லோரும், தங்களால் எந்த எந்தப் பொருட்களைக் கொண்டு உருவாக்க முடியுமோ அவற்றையே விக்கெட்டாக அமைத்துக் கொண்டு ஆடினார்கள். மூங்கில் குச்சிகளால் ஆன தட்டிகள் (Hurdle): கதவு (Gate): பின்புறம் சாய்ந்திட வசதியில்லாத ஆசன இருக்கை அதாவது முக்காலி (Stool): மரம் மற்றும் உயரமான கல் இவைகளே விக்கெட்டுகளாக அந்நாட்களில் ஆடுவோருக்குப் பயன்பட்டன. 1775ம் ஆண்டின் நிகழ்ச்சிக்குப் பிறகு, 3 குறிக் கம்புகள் ஊன்றப்பட்டு விக்கெட்டாக வடிவம் பெற்றது. மூன்று விக்கெட் கம்புகளையும் இணைக்க ஒரே ஒரு இணைப்பான் Bail மட்டுமே பயன்படுத்தப் பட்டது. மூன்று கம்புகளை இணைக்கும் மேல் உள்ள குச் சிக்கு Bail என்று பெயர் வந்ததும் ஒரு காரணத்தோடு தான். சரிமட்டமாக உள்ள பலகைச் சட்டமானத்தை (Horizontal Rail) ஆங்கிலத்தில் Bail என்று கூறுவார்கள். இந்த நீண்ட மரச்சட்டமானது, ஆட்டு மந்தைகளை உள்ளே அடைத்து வைத்திருக்கின்ற தொழுவத்தின் (Sheep Pens) சிறிய கதவுகளை, மேற்புறத்தில் இணைத்து வைத்து உதவுகின்ற தன்மையில் அமைந்தவையாகும். அதாவது, சிறிய கதவு அடிக்கடி திறந்து கொள்ளாமல், இறுக்கமாக மேற்புறத்தில் அடித்தாற்போல் சேர்த்து வைக்க உதவுகின்ற வகையில் அமைந்ததாகும்.