பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

57


ஆண்டின் விதிப்படி, பந்தின் கனம் சற்று எடை குறைக்கப்பட்டதாக மாற்றம் கொண்டது. அதாவது பந்தின் கனம் 5 1/2 லிருந்து 5 3/4 அவுன்சுக்குள்ளானதாகத்தான் அமைக்கப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த எடையே, தற்போதைய கிரிக்கெட் பந்தின் எடையாகவும் அமைந்துவிட்டிருக்கிறது. 1838ம் ஆண்டுக்கு முன்னதாக, அவரவர் விருப்பம்போல பந்தின் சுற்றளவு அமைக்கப்பட்டு வந்தது. அதற்கும் ஒரு அளவினை அமைத்து, பந்தின் சுற்றளவு 9 லிருந்து 9 1/2 அங்குலத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்தனர். அந்த அமைப்பு மாறி, தற்போதுள்ள 8 13/16 லிருந்து 9 அங்குலத்திற்குட்பட்டதாக சுற்றளவு மாற்றப்பட்டு விட்டது. தற்போதைய பந்தானது கார்க்காலும் முறுக்கு நூலாலும் அழுத்தமுடன் கட்டப்பட்டு, தோலினால் மூடப்பட்டு, இறுக்கமான முறையிலே தைக்கப்பெற்று, மின்னுகின்ற செவ்வண்ணத்தால் உருவாக்கப்படுகிறது. பந்தின் அமைப்பும் வண்ணமும் வடிவமும் மாறி வந்தது போலவே, பந்தெறி முறையும் தவணையும் (Over) மாறிமாறியே வந்திருக்கிறது. இது, ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும், ஆட்டத்தின் வளர்ச்சியையுமே குறிக்கிறது.

ஆங்கிலத்திலே Over எனும் சொல்லுக்கு ஆங்கில அகராதியில், மேலே, மேலும், அதிகமாய், மிஞ்ச, தாண்டி, மீது என்று பல பொருளில் அர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டத்தில் வரும் Over எனும் சொல்லுக்கு இப்பொருள்களில் எதுவும் ஏற்புடைத்தாக இல்லாமல் இருப்பதால், ஆட்ட முறைக்கேற்ப புதிய சொல் ஒன்றை உருவாக்க வேண்டி யிருந்தது. அதனால் இதற்கு 'பந்தெறி தவணை' என்று பெயர் தரப்பட்டிருக்கிறது.