பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

69


'விளையாடிப் பார்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை என்று ஸ்கொயர் லாம்பர்ட் குழு முடிவு செய்தது. அதன்படி, பிரடெரிக் குழு பந்தாட (Batting) இருந்த பொழுது, லாம்பர்ட்தான் பந்தெறிபவராக இருந்தார்.

விக்கெட்டுக்கு நேராகப் பந்தையெறிந்தால், எதிராட்டக்காரர் அடித்து விட்டால், தன் பாங்கர் ஆடமுடியாது என்று எண்ணிய லாம்பர்ட், ஒரு தந்திரம் செய்தார். விக்கெட்டுக்கு நேராகப் பந்தை எறியாமல், அவருக்கு எட்டாமல் அதாவது எட்டி அடிக்க முடியாதவாறு பந்தை எறிந்து கொண்டேயிருந்தார். தொடர்ந்து அதேபோல் எறிந்து கொண்டிருந்ததால், பொறுமை இழந்து போன பந்தடித்தாடும் ஆட்டக்காரர், வேகமாக ஆடி தனது விக்கெட்டை இழந்தார் (Out). அத்துடன், போட்டியிலே தோற்றும் போனார்.

இந்த நிகழ்ச்சியே எட்டாத பந்தெறி என்ற விதி வருவதற்கு வழியமைத்து விட்டது. கண்காணிக்கின்ற நடுவர்கள் குழம்பிப்போய் நிற்க, பந்தடித்தாடும் ஆட்டக்காரர்கள் என்ன செய்வது என்று திகைத்துபோய் நின்று தடுமாறி ஆடச் செய்த, இந்த எட்டாத பந்தெறிக்கு ஒரு விதியமைத்து, கட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்று வல்லுநர்கள் தீர்மானித்தனர். எட்டாத பந்தெறி என்றால் அதற்குத் தண்டனை தந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகியது. 1820 ஆம் ஆண்டு. எட்டாத பந்தெறி என்றால், எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறை ஒன்றை அமைத்து வரையறுத்து வைத்தனர். வந்தடையும் எல்லைக் கோட்டுக்கு (Return Crease) அப்பால் எறியப்படும் பந்தானது எட்டாத பந்தெறி என்று விதி அமைத்து வைத்தனர். இதிலே எடுக்கப்படுகின்ற ஒட்டங்கள் எல்லாம் பொய் ஓட்டங்கள் (Byes) என்ற தலைப்புள்ள குறிபபில் 1828ம் ஆண்டு வரை குறிக்கப்பட்டு வந்தன.