பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அந்த காலவரையறையில், எட்டாத பந்தெறியை நிலைப்பந்து என்று கூறி, அதற்குத் தண்டனையாக அடித்தாடும் குழுவிற்கு (batting Side) ஒரு ஒட்டம் என்றும் கொடுத்து வந்தனர்.

அதற்கடுத்தபடியாக, எட்டாத பந்தெறிக்குள்ள விதிமுறை சற்று விரிவு பெற்றது. அதாவது, பந்தடித்தாடும் எல்லைக்கோடானது (Popping Crease) எட்டடி நீளமாக ஆக்கப்பட்டு, அந்தக் கோட்டிற்கு அப்பால் போய் பந்தெறியாளரது பந்து போனால், அதுவே எட்டாத பந்தெறி என்றும் முடிவு செய்தனர். அவ்வாறு போனாலே, எட்டாத பந்தெறி என்று சொல்லிவிடலாம் என்று நடுவருக்கும் தைரியமாகப் பணியாற்ற வழிகோலினர். அந்தப் பந்து நிலைப்பந்தல்ல. (Dead Ball) ஆட்டத்தில் ஆடப்படும் பந்தே என்றும் கூறி, ஆட்டத்தில் விறுவிறுப்பான நிலையை ஏற்படுத்தினர். அதற்குத் தண்டனையாக ஒரு ஒட்டம் எதிர்க் குழுவிற்குத் தரப்பட்டது.

அதன்பின்னர், 1844ம் ஆண்டு, புதிய விதிமுறை ஒன்றும் புகுத்தப்பெற்றது. அதாவது, எட்டாத பந்தெறி என்று நடுவர் கூறிவிட்டால், பந்தடி ஆட்டக்காரர் முடிந்தவரை எத்தனை ஓட்டங்கள் வேண்டுமென்றாலும் ஓடி எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்து விட்டனர். இதனால் அடித்தாடும் குழுவிற்கு அதிகமான பயன்கள் நிகழ்ந்தன.

இவ்வாறு விரிவு பெற்றுவிட்ட விதிமுறையானது, 1947 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. அவ்வப்போது பல சிக்கலான சூழ்நிலைகள் தோன்றினாலும், உள்ள விதியை வைத்துக் கொண்டே சமாளித்து வந்தனர். 1947ம் ஆண்டு, எட்டாத பந்தெறி என்றால், எப்படி இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக விளக்கித் தெளிய வைக்க, ஒரு விதிமாற்றத்தைப் புகுத்தினர்.