பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

75


பந்தானது, பந்தடி ஆட்டக்காரருக்கு இடப்புறமாக (offside) விழுந்து, பிறகு விக்கெட்டை நோக்கி வரும்போது, காலால் தடுத்தாடினால், அவர் ஆட்டமிழந்து விடுவார் என்பதுதான் அந்த விதியாகும்.

இந்த விதியே 1970லும் 1972லும் சற்று மாறி இன்றைய விதியாக மாறி, மறுமலர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தகைய விதியையே, கீழே கொடுத்திருக்கிறோம்.

பந்தெறியும் ஒரு விக்கெட் முனையிலிருந்து, தான் தடுத்தாடுகின்ற விக்கெட்டுக்கு நேராக இருந்து ஆடும்போது, தனது கையிலோ அல்லது பந்தாடும் மட்டையிலோ முதலில் பந்து படாமல்; அந்தப் பந்தானது இணைப்பான்களுக்கு (bails) மேலாக வந்தாலும், அதன் வழியில் குறுக்கிட்டு இடையிலே தடுத்தால், ஒரு விக்கெட்டிலிருந்து இன்னொரு விக்கெட்டுக்கு நேர்க்கோட்டு அமைப்பில் நேராக எறியப்பட்ட அந்தப் பந்து நேராக விக்கெட்டை நோக்கிச் சென்றிருக்கும் அல்லது ஆடுவோரின் வலப்புறத்தில் விழுந்த பந்தானது அவரது விக்கெட்டை நோக்கி வந்திருக்கும், அதனால் விக்கெட் விழுந்திருக்கும் என்று நடுவர் கருதினால், அபிப்ராயப்பட்டால், விக்கெட்டின் முன்னே கால் வைத்திருந்தார் என்ற குற்றத்திற்கு அந்த பந்தடி ஆட்டக்காரர் ஆளாகின்றார்.

'விக்கெட்டின் முன்னே கால்' எனும் விதி பற்றிய விளக்கமும் விவரமும் இப்படியாக மாறி மாறி வந்து வளர்ந்தது.

8. பந்தாடும் தரை (Pitch)

பந்தெறியாளர் ஓடிவந்து பந்தெறிய, அதைப் பந்தாடும் மட்டையுடன் நின்று தடுத்தாடும் ஆட்டக்காரர் ஆட முயலும் தரைப் பகுதியையே பந்தாடும் தரை என்கிறோம். தோன்றிய காலம் எது என்றால் வரலாற்றுக் குறிப்புக்கு அகப்படாமல்