பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கிரிக்கெட் ஆட்டம் வட்டம் போட்டுக் கொண்டிருந்தாலும், ஒரு சில விவரமான குறிப்புக்கள் கிடைத்தவற்றில், ஆச்சரியமான உண்மையை நமக்குத் தெரிவிப்பது இந்தப் பந்தாடும் தரைதான்.

கிரிக்கெட் ஆட்டத்திற்கென்று பல விதிகள் 1744ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் பந்தாடும் தரையானது இரண்டு விக்கெட்டுகளுக்கும் இடைப்பட்ட தூரமாக அமைக்கப்பட்டு, அதன் நீளம் 22 கெஜம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதுவே இத்தனை ஆண்டுகளும் மாறாமல், ஒரே அளவில் இருந்து வருவதுதான் நமக்கு ஆச்சரியமானதாகும்.

இந்த அளவு முதன் முதலாக எவ்வாறு அமைந்தது என்ற காரணத்தை அறிய விழைபவருக்கு, இங்கிலாந்தில் உள்ள சேக்சன் எனும் பகுதியில் உள்ள நிலப்பகுதியின் துண்டு நிலங்களின் அகல அளவானது, இந்த நீளத்தில் தான் இருந்தன. அந்த அளவே அப்படியே இதற்கும் வந்திருக்கலாம் என்று ஒரு சிலர் அபிப்பிராயப் படுகின்றனர்.

அதேபோல, நிலத்தை அளக்கின்ற சங்கிலியின் நீளமும் 22 கெஜமே அமைந்திருப்பது, இரண்டையும் சம்பந்தப்படுத்தி எண்ணவும் தோன்றுகிறதல்லவா! என்றும் சிலர் கூறுகின்றனர். எந்தக் கருத்து எப்படி இருந்தாலும், இந்த 22 கெஜ நீளமான பந்தாடும் தரையின் நீளத்தின் அளவு இதுவரை மாறாமலே இருந்து வருகிறது.

தற்போது தொடங்குவதற்கு முன்னர், இரண்டு குழுத் தலைவர்களும் ஆடுகின்ற மைதானத்திற்குச் சென்று, நாணயத்தைச் சுண்டியெறிய, ஒருவர் பூவா தலையா என்று கேட்க, கேட்பதில் வெற்றி பெற்றவர், பந்தெறிவதா அல்லது பந்தாடுவதா என்று விரும்பியதைக் கேட்கும் உரிமை பெற்றுத்