பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆடப்பட்டபொழுது, விக்கெட்டுக்கு முன்னால் தற்போது குறித்து வைக்கப்பட்டிருக்கும் கோடுகளுக்குப் பதிலாக, சிறு குழி ஒன்று பறித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது, பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஒரு ஒட்டம் எடுக்க, ஒரு விக்கெட்டிலிருந்து மற்றொரு விக்கெட்டை நோக்கி ஓடி வந்து விக்கெட்டுக்கு முன்னால் உள்ள கோட்டைத் தொட்டால் போதும். ஆனால் அந்தக் காலத்தில் ஓடி வந்து அந்தக் குழியில் பந்தாடும் மட்டையை வைத்தால்தான் ஓட்டம் குறிக்கப்படும். அதற்குள் பந்தைத் தடுத்தாடுவார் அந்தக் குழியில் பந்தைப் போட்டுவிட்டால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழக்க வேண்டும்.

இந்த ஆட்டமுறை அமைப்பானது 1802ம் ஆண்டு தோன்றிய விதி ஒன்றினால் சற்று மாற்றம் பெற்றது. இந்தக் கோடானது, விக்கெட்டுக்கு முன்புறம் 46 அங்குல தூரத்தில் குறிக்கப்பட வகை செய்யப்பட்டது. இந்த 46 அங்குல நீளம் எப்படி வந்தது என்றால், அந்தக் காலத்தில், இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துணிகள் 46 அங்குல அகலத்தில் தான் இருந்து வந்தன. அந்த அகல அளவையே இதற்கும் நீள அளவாக வைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

1819ம் ஆண்டு, அந்த நீள அளவு சற்று விரிவு பெற்றது. அதாவது 48 அங்குலமாக நீண்டு கொண்டது. விக்கெட்டிலிருந்து பந்தடித்தாடும் எல்லைக்கோடானது (popping Crease) 4 அடி தூரத்திற்கு வந்து, அந்த அளவிலேயே இன்றும் தொடர்ந்து வருகிறது. அத்துடன் விக்கெட்டின் குறிக்கம்பிலிருந்து (Stump) இருபுறமும் 6 அடி தூரம் (1.83மீ) விரிவுபடுத்தி விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, பந்தெறி எல்லைக்கோடும் (Bowling crease) கொஞ்சங் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.