பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

79


1744ம் ஆண்டுதான், பந்தெறி எல்லைக்கோடும் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது. விக்கெட்டுக்கு இருபுறமும் 3 அடி தூரம் நீட்டப்படவேண்டும் என்பது தான் முதன் முதலாக வந்த விதியாகும்.

அப்பொழுது, கோட்டுக்குப் பதிலாக, புல்தரையை வெட்டிக் கோடு போல ஆக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த முறை 1830ம் ஆண்டிலிருந்து மாறி வெள்ளை வண்ணம் அடித்து கோட்டைக் குறிக்க வேண்டும் என்ற முறையும் அமுலுக்கு வந்தது.

1821ம் ஆண்டு, அந்தக் கோடு 3 அடி 31/2 அங்குல தூரம் நீட்டப்படவேண்டும் என்ற விதிமுறை வந்தது.

அதற்குப் பிறகு 1902ம் ஆண்டு, மீண்டும் ஒரு புதிய விதி வந்தது. அதன்படி, விக்கெட்டுக்கு இருபுறமும் 4 அடி தூரம் கோட்டினை நீட்டிவிட வேண்டும் என்பதே!

1939ம் ஆண்டிலிருந்து பந்தெறியும் எல்லைக்கோட்டின் முழு நீளம் 8 அடி 8 அங்குலம் ஆகிவிட்டது. அதாவது விக்கெட்டுக்கு இருபுறமும் 4 அடி 4 அங்குலமாகும். தற்பொழுதுள்ள விதியும் இதுவேதான். விக்கெட்டில் உள்ள நடுகுறிக் கம்பிலிருந்து இருபுறமும் 4 அடி 4 அங்குல நீளம் அந்தக் கோடு விரிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதே

பந்தாடும் தரையில் இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த பொழுதே, பந்தாடும் தரையை எவ்வாறு பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும் என்றும் விதிகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் வந்திருக்கின்றன.

ஆரம்ப நாட்களில் பந்தாடும் தரைபற்றி அவ்வளவாக யாரும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆட்டத்தில் வேகமும் போட்டியும் அதிகமாக ஆக, பந்தாடும் தரை பற்றிய நினைவும் மிகுதியாக இடம் பெறலாயிற்று. 1788ம் ஆண்டில் தோன்றிய