பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஒரு விதியின்படி, பந்தாடும் தரையில் புல் செதுக்கல், தண்ணி விடுதல், உருளையால் உருட்டுதல், மூடிவைத்தல் போன்ற எல்லா காரியங்களுக்கும் இரு குழுத் தலைவர்களும் ஏகமனதாக சம்மதித்தால்தான் நிகழ்த்தலாம் என்பதாக வந்தது.

அதன் பின்னர் , பந்தடித்தாடும் தரையில் ஈரப்பகுதியைப் போக்கிட, மரத்தூளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. 1849ம் ஆண்டு மேலும் ஒரு மாற்றம். ஏதாவது ஒரு குழு விரும்பினாலும் ஒவ்வொரு முறை ஆட்டம் (Innings) தொடங்குவதற்கு முன்னும் பந்தாடும் தரை கூட்டி உருட்டப்படவேண்டும் என்பதாக மலர்ந்தது.

பின்னர், இரண்டு 'முறை ஆட்டத்திற்கு' இடையில், பந்தடித்தாட விரும்பும் குழு விரும்பினால், பந்தாடும் தரை உருட்டப்படலாம் என்று 1860ம் ஆண்டு புதிய விதிமுறை புகுத்தப்பட்டது.

1863ம் ஆண்டு அந்த விதியில் மேலும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, போட்டி ஆட்டம் தொடங்கும் ஒவ்வொரு நாள் ஆரம்பத்திலும் 10 நிமிடத்திற்குள் பந்தாடும் தரையை உருட்டிவிட வேண்டும் என்பதாக வந்தது. 1910ம் ஆண்டு, ஒடி வந்து பந்தெறிவோர் காலடியில் விழுகின்ற பள்ளத்தை நிரவிவிடவும், பந்தடித்தாடுபவர் நின்றாடும் இடத்தில் ஏற்படும் குழியையும் சரி செய்யவும் விதி மாற்றம் ஏற்பட்டது.

1931ம் ஆண்டு, 7 நிமிடத்திற்குள்ளே பந்தாடும் தரை உருட்டப்படவேண்டும் என்ற தற்போதைய விதிமுறை ஏற்பட்டது. இவ்வாறாக பந்தாடும் தரை, பல மாற்றங்களைப் பெற்று, ஆட்டத்தில் வேகமும் விறுவிறுப்பும் தோன்றிட வழி வகுத்துத் தந்தது.