பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



1. வரலாறு வளர்கிறது

கீர்த்திமிக்க ஆட்டம்

கீர்த்திமிக்க ஆட்டமாக, இன்று கிரிக்கெட் விளங்குகிறது. ஒலிம்பிக் பந்தயங்களுள் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இடம் பெறாவிட்டாலும், உலக அரங்கிலே உன்னதமான ஓரிடத்தைப் பெற்று, பெருமை மிகு ஆட்டமாகத் திகழ்ந்து வருகிறது.

ஐந்து நாட்களும் போட்டி நடக்கிறது என்றாலும், பகல் முழுவதும் இயற்கையின் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஒரே இடத்தில் உட்காரவைத்து, உணர்ச்சிப்பிழம்பான நிலையில் அவர்களை அமர்த்தி, மகிழ்ச்சியில் பேரின்ப நிலையில் நிறுத்திவைத்திருக்கும் பண்பினால்தான், கிரிக்கெட் ஆட்டம் அன்றும் இன்றும் ஒரு கீர்த்தி மிக்க ஆட்டமாக விளங்கி வருகிறது.

கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் போன்று ஒருவரால் உருவாக்கப்படாமல், வளைகோல் பந்தாட்டம், கால்பந்தாட்டம் போன்று வரலாற்றுக்கு அகப்படாத, ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட நிலையில் கிரிக்கெட் உலாவருகிறது. ஆராய்ச்சி நிபுணர்களும் ஆட்ட அறிஞர்களும் கூட கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து போயிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் ஆட்டம் எங்கு தோன்றியது, எப்பொழுது தோன்றியது என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிவளைத்துச் சொல்கின்ற அளவிலேதான் ஆராய்ச்சியாளர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, கிரிக்கெட் ஆட்டத்தின் தோற்றமானது என்னவென்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது.