பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

48. எட்டாத பந்தெறிக்குரிய தண்டனை என்ன?

‘எட்டாத பந்தெறி’ என்று நடுவர் கூறிய உடன், அந்தப் பந்து நிலைப்பந்தாக (Dead Ball) ஆகிவிடாது. அந்தப் பந்தை அடித்தாடலாம். அவ்வாறு அடித்தாடியதன் மூலம் எடுக்கின்ற ‘ஓட்டங்கள்’ எல்லாம் ‘எட்டாத பந்தெறி’ என்ற தலைப்பின் கீழ் குறித்துக்கொள்ளப்படும்.

அவர் ‘ஓட்டம்’ எதுவும் எடுக்காமல் இருந்து விட்டால், அந்த எறிக்குத் தண்டனையாக, எதிர்க்குழு ஒரு ‘ஓட்டம்’ பெறும்.

49. எட்டாத பந்தெறியின் போது ஒரு பந்தடி ஆட்டக்காரர், ஆட்டமிழந்து விட (Out) வாய்ப்பு உண்டா?

அந்தப் பந்தடி ஆட்டக்காரர், தனது விக்கெட்டைத் தானே அடித்துத் தள்ளி வீழ்த்திக் கொண்டால்; தனது ஆடும் எல்லைக்கு வெளியே நிற்கும்போது, விக்கெட் காப்பாளரால் பந்துடன் விக்கெட் வீழ்த்தப்பட்டால் (Stumped); பந்தைக் கையால் (எடுத்து) ஆடினால்; அல்லது எதிர்க் குழுவினர் அந்தப் பந்தை ஆட முடியாதவாறு இடையூறு விளைத்துத் தடுத்து நின்றால் தான் ஆட்டமிழப்பார்.

இவைகளில் ஏதாவது ஒன்றையும் செய்யாமலிருந்து, ஓட்டம் எடுக்கும் முயற்சியின்போது, விக்கெட்டுகளுக்கிடையில் இருக்கையில், அவர் விக்கெட் வீழ்த்தப்படுகிறபொழுது (Run Out)தான் ஆட்டமிழக்க வாய்ப்பு உண்டு.